உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் பிரசாரக் குழுவின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் சீனா மற்றும் விளாடிமிர் புடினின் ரஷ்யா தொடர்பாகவும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை பற்றியும் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் குறித்து கருத்து தெரிவித்தபோது, உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தானைக் கருதுவதாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஜி ஜின்பிங் தனக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து கொண்டாலும், அதில் மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. அதை எப்படிக் கையாள்வது? ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒப்பீட்டளவில் அதை எப்படிக் கையாள்வது? நான் நினைப்பது ஒன்றுதான். உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான்” என்று ஜோ பைடன் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பைடனின் இந்த கருத்து, அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்தின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.