பாக். போர் விமானங்கள்: மேம்படுத்த அமெரிக்கா நிதி!

பாக். போர் விமானங்கள்: மேம்படுத்த அமெரிக்கா நிதி!

Share it if you like it

பாகிஸ்தானுக்கு வழங்கிய சக்திவாய்ந்த எஃப் 16 போர் விமானங்களை மேம்படுத்த, அமெரிக்கா 450 மில்லியன் டாலர் மதிப்பிலான தளவாடக் கருவிகளை வழங்க முடிவு செய்திருக்கிறது. இது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாக இருந்து வந்தாலும், இந்தியாவுக்கு எதிரி நாடான பாகிஸ்தானுக்கும் அயுதங்களை வழங்கி வருகிறது அமெரிக்கா. அந்த வகையில், இந்தியாவுக்கு போட்டியாக அமெரிக்காவிடம் இருந்து எஃப் 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியது. இது இந்தியாவின் மிக் ரக விமானத்தை விட நவீனமானது. இந்த எஃப் 16 ரக விமானம்தான் பாலகோட் தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு மிகவும் கைகொடுத்தது. எனவே, இந்த விமானத்தை மேலும் நவீனப்படுத்த அமெரிக்காவின் உதவியை நாடியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி, அமெரிக்கா கண்டுகொள்ளாமலேயே இருந்து வந்தது.

இந்த சூழலில், ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால், இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படும் என்று மிரட்டினார் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனாலும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறு எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்கி இந்தியா ஒப்பந்தம் போட்டது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா கடும் அதிருப்தியடைந்தது. இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா. எனவே, ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்தன.

இந்த விஷயத்தில் இந்தியா, தனக்கு ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்கா கணக்குப் போட்டது. ஆனால், உக்ரைன் போரை இந்தியா விமர்சித்தாலும், சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. இதனால், இந்தியாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறது ரஷ்யா. அதோடு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடையையும் மீறி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், பெட்ரோல் ஆகியவற்றையும் இந்தியா வாங்கி வருகிறது. இதுதான் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், பாகிஸ்தானுக்கு தாங்கள் ஏற்கெனவே வழங்கி இருக்கும் எஃப் 16 போர் விமானங்களை மேலும் மேம்படுத்த 450 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 3,500 கோடி) மதிப்பிலான கருவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. போர் விமானங்களில் அதநவீன ரேடார்களை பொருத்துவது, சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசும் அமைப்புகளை உருவாக்குவது போன்ற மாறுதல்களை செய்ய அமெரிக்கா இந்த தளவாட கருவிகளை வழங்குகிறது. இந்த விவகாரம்தான் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜி.பார்த்தசாரதி கூறுகையில், “அமெரிக்கா செய்யும் இந்த உதவியின் மூலம் பாகிஸ்தானின் போர்த் திறன் பல மடங்கு அதிகரிக்கும். இதன் எதிர்விளைவுகளை இந்தியாதான் சந்திக்க வேண்டி இருக்கும். இதன் மூலம் இந்தியாவுக்கு நிகரான ராணுவ வலிமை பெற்ற நாடாக பாகிஸ்தானை மாற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. இந்த விவகாரத்தில் தனது கவலையை அமெரிக்காவிடம் இந்தியா தெரிவிக்க வேண்டும். இது புறக்கணிக்கத்தக்க விஷயம் அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும்” என்றார்.


Share it if you like it