அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சைக்கிளிலிருந்து தடுமாறி விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இச்சம்பவத்தில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
அமெரிக்க அதிபராக இருப்பவர் ஜோ பைடன். இவருக்குச் சொந்தமான கடற்கரை வீடு டெலாவேர் மாகாணத்தில் இருக்கிறது. பொதுவாக, விடுமுறையை கழிப்பதற்கு இந்த கடற்கரை வீட்டிற்கு ஜோ பைடன் செல்வது வழக்கம். அந்த வகையில், விடுமுறையை கழிப்பதற்காக டெலாவேரிலுள்ள கடற்கரை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் ஜோ பைடன். இந்த சூழலில், சனிக்கிழமை காலை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சைக்கிளின் சென்ற ஜோ பைடன், கடற்கரை வீட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஜோ பைடனை காண அவரது ஆதரவாளர்கள் சிலர் வந்திருந்தனர். இதைப் பார்த்த பைடன், சைக்கிளை நிறுத்தி விட்டு, இறங்க முயற்சித்தார். ஆனால், காலை கீழே ஊன்றுவதற்கு முன்பே அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால், பதட்டமடைந்த அவரது பாதுகாவலர்கள், ஓடி வந்தனர். எனினும், உடனடியாக தானாகவே எழுந்து கொண்ட பைடன், நான் நலமாக இருக்கிறேன் என்று கூறினார். இச்சம்பவத்தில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. பைடன், இந்த கடற்கரை வீட்டில் இன்னும் சில நாட்கள் தங்கி ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது.
ஜோ பைடனுக்கு வயது 79 ஆகிவிட்டது. இதனால், அவர் அடிக்கடி தடுமாறுகிறார். ஒரு முறை விமானத்தில் ஏற முயன்றபோது தடுமாறினார். அதேபோல, வயதாகி விட்டதால் ஞாபக மறதியும் பைடனுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையில் ஏராளமான அறைகள் இருப்பதால், எந்த அறை தனது என்பதில் பைடனுக்கு அடிக்கடி குழப்பம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, பைடன் கீழே விழுந்த தகவல் அறிந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பைடன் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள். அவர் நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.