மேற்குவங்கத்தில் அரசியல் வன்முறை கிட்டத்தட்ட ஜனநாயகத்தையே அழித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கண்டி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: 5 கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளன. இப்போதே பிரதமர் மோடி 310 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். மம்தா பானர்ஜியால் இண்டியா கூட்டணி அழிந்துவிட்டது. மேற்குவங்கத்தில் பா.ஜ.க 30 தொகுதிகளில் வெற்றி பெறும். அதன் பிறகு, திரிணமுல் காங்கிரஸ் கட்சி உடைந்துவிடும்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. ஓட்டுவங்கியை கண்டு மம்தா அஞ்சுகிறார். 70 ஆண்டுகளாக, ராமர் கோயிலை கட்ட காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் தடைகளை உருவாக்கியது. மேற்குவங்கத்தில் அரசியல் வன்முறை கிட்டத்தட்ட ஜனநாயகத்தையே அழித்துவிட்டது.
இங்கு, பஞ்சாயத்து தேர்தல் நடந்த போது, 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாங்கள் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள். உங்கள் போலீசாருக்கு நாங்கள் பயப்படவில்லை என மம்தாவுக்கு சவால் விடுக்கிறேன். மேற்கு வங்கத்தில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகும், துணை ராணுவப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.