மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில், பா.ஜ.க. சார்பில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடக்கவிருக்கிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு அமித்ஷா சென்னை வந்தார். இரவு 9:35 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. பின்னர், அமித்ஷா காரில் ஏறி கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். வழியில் பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். பதிலுக்கு அமித்ஷாவும் காரிலிருந்து இறங்கி தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடியே சிறிது துாரம் நடந்து சென்றார். அப்போதும், சாலையிலிருந்த மின் விளக்குகள் அணைத்தன. இந்த மின்தடை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்ததால், அங்கு கூடியிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் கோபமடைந்தார்.
மின்தடைக்கு தி.மு.க. அரசின் சதிதான் காரணம் என்று சொல்லி, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சில நிமிடங்கள் பரபரப்பானது. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது திடீரென எப்படி மின்தடை ஏற்படும்? இது ஒரு பாதுகாப்பு குறைபாடு. இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.