அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடையை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறி, தனது பெருந்தன்மையைக் காட்டி இருக்கிறார் அண்ணாமலை.
வேலூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வந்தபோது, திடீரென மின்தடை ஏற்பட்டது. எனினும், இதை பொருட்படுத்தாக அமித்ஷா, காரில் ஏறி கிண்டியில் புக் செய்யப்பட்டிருந்த நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
வழி நெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டு நின்று அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போதும் திடீரென மின்தடை ஏற்பட்டது. இது தி.மு.க.வின் திட்டமிட்ட சதி என்று சொல்லி பா.ஜ.க. தொண்டர்கள் ஆவேசமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையோ, மின்தடையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், அடுத்த முறை இதுபோல நடக்காமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தனது பெருந்தன்மையை காட்டி இருக்கிறார்.
இது தொடர்பான அண்ணாமலையின் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.