சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார். அவருடைய உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பிரதமர் மோடி, விஜயகாந்த் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது :-
விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன். கேப்டன் குறித்த சில கருத்துக்களையும், அவரது சிறப்புகளையும் எழுதியிருக்கிறேன்.
மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான திரு விஜயகாந்த் அவர்களை சில நாட்களுக்கு முன்பு, நாம் இழந்தோம். அனைவருக்கும் கேப்டனாகத் திகழ்ந்த அவர், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமைப்பண்பைக் கொண்டிருந்தார்.
தனிப்பட்ட முறையில், மிகவும் அன்பான நண்பராக விளங்கிய அவருடன் நான் பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாகப் பழகியதுடன், அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன்.
கேப்டன் பன்முக ஆளுமைத்தன்மை கொண்டவர். இந்திய சினிமா உலகில் விஜயகாந்த் அளவுக்கு அழியாத முத்திரை பதித்த நட்சத்திரங்கள் வெகு சிலரே. அவரது ஆரம்ப கால வாழ்க்கை, திரைப் பிரவேசம் ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். எளிமையான ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவின் உச்சம் வரையிலான அவரது பயணம், வெறுமனே ஒரு நட்சத்திரத்தின் கதையாக மட்டுமல்லாமல், இடைவிடாத முயற்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வரலாறாக அமைந்தது. புகழுக்காக அவர் சினிமா உலகில் நுழையவில்லை. ஆர்வத்தாலும் விடாமுயற்சியாலும் உந்தப்பட்ட பயணம் அவருடையது. அவரது ஒவ்வொரு படமும் பொழுதுபோக்காக மட்டும் அமையாமல், அவரது சமகால சமூக நெறிமுறைகளையும் பிரதிபலித்ததுடன் பரந்த அளவிலான ரசிகர்கள் மனதில் ஆழமாக எதிரொலித்தது.
கேப்டன் ஏற்று நடித்த பாத்திரங்களும் அவற்றை அவர் பிரதிபலித்த விதமும் சாமானிய குடிமக்களின் போராட்டங்களைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டியது. அநீதி, ஊழல், வன்முறை, பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய கதாபாத்திரங்களில் அவர் அடிக்கடி தோன்றினார். அவரது திரைப்படங்கள் சமூகத்தில் நிலவும் நற்பண்புகளையும், தீமைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கின என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பொழுதுபோக்கு மற்றும் சமூக கருத்துக்களின் இந்த தனித்துவமான கலவை அவரை பிற நடிகர்களிடமிருந்து வேறுபடுத்தி தனித்துவமாக காட்டியது.
இந்த இடத்தில், கிராமப்புற வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பை நான் குறிப்பாக முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மகத்தான புகழைப் பெற்ற பிறகும், உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகும், கிராம வாழ்க்கை மற்றும் பாரம்பரிய நெறிமுறைகள் மீதான அவரது காதல் மாறாமல் அப்படியே இருந்தது. அவரது திரைப்படங்கள், கிராமங்களுடனான அவரது அனுபவத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டின. கிராமப்புற சூழலைப் பற்றிய நகர்ப்புற மக்கள் கொண்டிருந்த கருத்தை மேம்படுத்த அவர் அடிக்கடி மேற்கொண்ட முயற்சிகள் அலாதியானவை.
ஆனால் கேப்டனின் தாக்கம் வெள்ளித்திரையுடன் நின்றுவிடவில்லை. அரசியலிலும் நுழைந்து சமூகத்திற்கு மேலும் விரிவான முறையில் சேவை செய்ய அவர் விரும்பினார். அவரது அரசியல் பிரவேசம் மிகுந்த துணிச்சலும் தியாகமும் நிறைந்த வரலாறாகும். தமிழக அரசியலில் அம்மா ஜெயலலிதா அவர்கள், கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆகிய இரு ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் அரசியல் களத்தில் பிரவேசித்தார். இத்தகைய சூழலில், மூன்றாவது மாற்று வாய்ப்பை முன்வைப்பது தனித்துவமானது, துணிச்சலானதும் கூட. ஆனால் அதுதான் கேப்டனின் விசேஷ குணநலன்! – செயல்படுவதில் அவருக்கென்று தனி வழி இருந்தது. 2005-ல் அவர் நிறுவிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் (தே.மு.தி.க.) சித்தாந்தத்தில் தேசியம் மற்றும் சமூக நீதிக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பிரதிபலித்தது. அவர் மேடையில் பேசும் போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக திரையில் அடிக்கடி குரல் கொடுத்த அவரது திரை ஆளுமையுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. வழக்கமாக வலுவான இரு துருவ போட்டி நிலவிய தமிழக அரசியலில், 2011 ஆம் ஆண்டில், அவர் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே, சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார்.
2014 மக்களவைத் தேர்தலின் போது நான் கேப்டனுடன் பணிபுரிந்தேன், அப்போது எங்கள் கட்சிகள் ஒரு கூட்டணியில் போட்டியிட்டு 18.5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றன – 1989 தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு முக்கிய பிராந்திய கட்சிகளும் இடம் பெறாத தேசிய கூட்டணி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவிகிதம் இதுவாகும்! சேலத்தில் நாங்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் அவரது ஆவேசமான உரையையும் மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பையும் நான் கண்கூடாக கண்டேன். 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்த மக்களில் அவரும் ஒருவராக இருந்தார். 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் என்னை சந்தித்தபோது, அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
தொழில் ரீதியான சாதனைகளைத் தாண்டி, விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை இளைஞர்களுக்கு மதிப்புமிக்க போதனைகளை வழங்குகிறது. அவரது உறுதிப்பாடு, ஒருபோதும் துவண்டுவிடாத மனப்பான்மை மற்றும் முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் திறன் ஆகியவை அவரது வாழ்க்கை பிறருக்கு கற்றுத் தரும் மிக முக்கிய பாடங்களாகும். அதேபோன்று அவரது பரந்த மனப்பான்மையும் உத்வேகம் அளிக்கக் கூடியதாகும். வள்ளல் தன்மைக்கு பெயர் பெற்ற இவர், ஈட்டிய தனது புகழையும், செல்வத்தையும் பல வழிகளில் சமூகத்தின் நலனுக்காக வழங்கினார். தமிழ்நாடும் ஒட்டுமொத்த இந்தியாவும் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னோடியாக மாற வேண்டும் என்பதில் அவர் எப்போதும் ஆர்வமாக இருந்தார்.
விஜயகாந்த் அவர்களின் மறைவால், பலரும் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். ஆனால் நான் நேசம் மிகுந்த, மதிநுட்பம் மிக்க ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். தீரம், கொடைத்தன்மை, கூர்மதி, உறுதிப்பாடு ஆகிய நான்கும் ஒரு வெற்றிகரமான தலைவரின் இன்றியமையாத கூறுகள் என்பதைப் பற்றி குறள் பேசுகிறது. கேப்டன் உண்மையிலேயே இந்தக் குணாதிசயங்களின் உருவகமாகத் திகழ்ந்தார், அதனால்தான் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவரது மங்காத புகழும் மாண்பும் ரசிகர்களின் இதயங்களிலும், தமிழ் சினிமா வரலாற்றிலும், பொது சேவையின் வழித் தடத்திலும் நீடித்து நிலைத்து நிற்கும். மேலும், அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.
மறைந்த தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் குறித்த மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி எழுதியுள்ள கட்டுரை.