இன்று இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்பே செய்தித்தாள்களில், இணையத்தளங்களில் என படத்திற்காக புரமோஷன் செய்துள்ளனர். அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்தியன் 2 படம் தான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
ஊழல்வாதிகளை தண்டிப்பதாக, ராணுவ வீரராக பிரபல நடிகர் நடித்து நாட்டுக்காக உயிரை விடுவது போன்ற திரைப்படங்களை பார்த்து ஆரவாரமாக கைதட்டி ரசிக்கும் நாம் தான் நாட்டுக்காக தன் குடும்பத்தை மறந்து கடும் பனியிலும் வெயிலிலும் துப்பாக்கி ஏந்தி கணமும் கண் இமைக்காமல் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து தன்னுடைய இன்னுயிரை நாட்டுக்காகவே அர்ப்பணிக்கும் ராணுவ வீரர்களை கொண்டாட மறுப்பது ஏன் ?
கேப்டன் அன்ஷுமன் சிங் சியாச்சின் பனிப்பாறையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 19, 2023 அன்று அதிகாலை மூன்று மணியளவில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்திய ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் தீப்பிடித்தது. இதனை கண்ட அன்ஷுமன் சிங் அங்கிருந்த வீரர்களை பத்திரமாக வெளியேற்றி காப்பாற்றினார். இருப்பினும் தீயானது ராணுவ வீரர்களுக்காக வைத்திருக்கும் மருத்துவ உபகரண அறையில் தீ பரவியது. அங்குள்ள மருத்துவ உபகரணங்களை எடுப்பதற்காக உள்ளே சென்ற அன்ஷுமன் சிங் வீர மரணமடைந்தார். அவரின் உடலுக்கு அரசு மரியாதை படி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கேப்டன் அன்ஷுமான் சிங்கின் துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவைக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான கீர்த்தி சக்ரா அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜூலை 5, 2024 அன்று வழங்கினார், விருதை கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் பெற்றுக்கொண்டார்.
கேப்டன் அன்ஷுமன் சிங் வாழ்க்கை வரலாறு :-
கேப்டன் அன்ஷுமன் சிங் 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பர்திஹா தல்பத் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சுபேதார் ரவி பிரதாப் சிங், இவரும் ஒரு ராணுவ வீரர் மற்றும் இவரது மனைவி திருமதி.மஞ்சு சிங். அன்ஷுமன் சிங்கிற்கு ஒரு மூத்த சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.அதில் இவர்தான் இளையவர்.
அன்ஷுமன் சிங் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சைல் இராணுவப் பள்ளியில் பயின்றார் மற்றும் ராஷ்ட்ரிய இராணுவப் பள்ளி சேயில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். உயர் கல்விக்காக, அவர் புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் (AFMC) சேர்ந்தார், அங்கு அவர் இராணுவ மருத்துவம், உயர்மட்ட மருத்துவம் மற்றும் போரில் ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றில் கடுமையான பயிற்சி பெற்றார்.
இதனை தொடர்ந்து கேப்டன் அன்ஷுமன் சிங் இந்திய ராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார் மற்றும் பஞ்சாப் படைப்பிரிவின் 26 வது பட்டாலியனில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். அவரது சேவைக் காலம் மார்ச் 19, 2020 முதல் ஜூலை 19, 2023 வரை நீடித்தது. உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் அவர் நிலைநிறுத்தப்பட்டபோது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மருத்துவ சேவையை வழங்குவதற்கு அவர் பொறுப்பேற்றார்.
ஜூலை 19, 2023 அன்று இரவு, ஷார்ட் சர்க்யூட் காரணமாக சியாச்சின் சாந்தன் டிராப்பிங் மண்டலத்தில் உள்ள வெடிமருந்துக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. விரைவான சிந்தனை மற்றும் அச்சமற்ற தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய கேப்டன் சிங், தீயில் சிக்கிய பல நபர்களை காப்பாற்ற முடிந்தது. மருத்துவ உதவிப் பெட்டியைப் எடுப்பதற்காக அவர் தன்னுடைய சொந்த அறைக்கு சென்றார். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியதால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது சக வீரர்களைக் காப்பாற்றும் போது வீரமரணம் அடைந்தார்.
இதுதொடர்பாக அன்ஷுமான் சிங் மனைவி ஸ்மிருதி சிங் கூறியதாவது :-
“நாங்கள் கல்லூரியின் முதல் நாளில் சந்தித்தோம். ஆனால் முதல் சந்திப்பிலேயே எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் AFMC (ஆயுதப் படை மருத்துவக் கல்லூரி)க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாங்கள் ஒரு பொறியியல் கல்லூரியில் சந்தித்தோம், ஆனால் அவர் மருத்துவக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நல்ல புத்திசாலியான மனிதர். அப்போதிருந்து, ஒரு மாத சந்திப்பிற்குப் பிறகு, எங்கள் காதல் உறவு எட்டு ஆண்டுகளாக தொலைதூர உறவாக இருந்தது, ”என்று அவர் நினைவு கூர்ந்தார்.
“பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். துரதிர்ஷ்டவசமாக, திருமணமான இரண்டு மாதங்களில், அவர் சியாச்சினுக்குப் பணியமர்த்தப்பட்டார். ஜூலை 18 அன்று, அடுத்த 50 ஆண்டுகளில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி நீண்ட உரையாடல் நடத்தினோம். நாங்கள் ஒரு வீட்டைக் கட்டப் போகிறோம், நாங்கள் குழந்தைகளைப் பெறப் போகிறோம் என அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி மிகவும் குதூகலமாக பேசிக்கொண்டிருந்தோம். ஜூலை 19ம் தேதி காலை (கடந்த ஆண்டு) நான் எழுந்தேன், அப்போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது, அதில் உங்கள் கணவர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.
இது வரை அந்த இழப்பை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதல் ஏழு முதல் எட்டு மணி நேரம், அப்படி எதுவும் நடந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றுவரை, அவர் உயிரிழக்கவில்லை அது உண்மையல்ல என்று நினைத்து தான் இருந்தேன்.
“ஆனால் இப்போது என் கையில் கீர்த்தி சக்ரா உள்ளது, அவர் வீரமரணமடைந்தது உண்மை என்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். ஆனால் பரவாயில்லை, அவர் ஒரு ஹீரோ. மற்ற மூன்று இராணுவ குடும்பங்களை காப்பாற்றுவதற்காக தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.நாங்கள் இருவரும் வாழ்ந்த சிறு வாழ்க்கையை நினைத்தே நான் வாழ்வேன்.
நான் என்னுடைய மார்பில் பதக்கத்துடன் மடிவேன்.என்னுடைய மரணமானது சாதாரண மரணத்தை போல் இருக்காது என்று அன்ஷுமன் சிங் கூறியதாக ஸ்மிருதி சிங் கூறினார்.
கேப்டன் அன்ஷுமன் சிங்கின் வாழ்க்கை, குறுகியதாக இருந்தாலும், அவருடைய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மை, நாட்டுப்பற்று பலரை ஊக்குவிக்கிறது. மேலும் அவரது தியாகம் தேசத்திற்கு சேவை செய்யும் வீரர்களின் துணிச்சலை நினைவுபடுத்துகிறது.