திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது :-
திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், ‘கந்த சஷ்டி விழா’ புகழ் பெற்றது. உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் இதற்காக திருச்செந்தூர் வருவார்கள். கந்த சஷ்டியின் 6 நாட்களும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் தங்குவார்கள்.
இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான ‘சூரசம்ஹாரம்’ வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ. 500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இது முருகப் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். பண்டிகைகள், திருவிழா காலங்களில் தனியார் பேருந்துகள், தனியார் வணிக நிறுவனங்கள் பல மடங்கு கட்டணங்களையும், விலையையும் உயர்த்தி மக்களிடம் முடிந்த அளவுக்கு கொள்ளை அடிக்கின்றன. அதுபோல, இந்து கோவில்களை மட்டும் தங்கள் பிடியில் வைத்துள்ள மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆயிரக்கணக்கில் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் இலவசமாக தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகளை, திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலைத்துறையும் செய்ய வேண்டும். லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் திருச்செந்தூரில் கழிவறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மீதும் பொது மக்கள் மீதும் திமுகவின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. அறம் கெட்ட அறநிலையத்துறை கட்டண கொள்ளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 200 கும் மேற்பட்ட ஹிந்து முன்னணி சகோதரர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மதசார்பற்ற அரசு என்று கூறிகொள்ளும் திமுக ஹிந்து மத கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து ஹிந்து விரோத கட்சி என்றும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.