தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணம் ராஜூ, உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக நுழைந்து, பிற்காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜு. இவர், தெலுங்கில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகின் ‘ரிபல் ஸ்டார்’ என்று அறியப்படும் கிருஷ்ணம் ராஜூ, கடைசியாக அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷியாம்’ படத்தில் நடித்திருந்தார். மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும் பதவி வகித்திருக்கிறார். மேலும், நடிப்பிற்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, கிருஷ்ணம் ராஜூ ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை செய்யப்படும் என்றும், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்றும், அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு தெலுங்கு திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகருமான ரிபெல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜூவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. நடிகராகவும், அரசியல் தலைவராகவும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் மறக்க முடியாதவை. கிருஷ்ண ராஜுவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.