இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் அனிதா பால்துரை. இவர் வைத்த வேண்டுகோளை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
.அனிதா பால்துரை ஒரு இந்திய கூடைப்பந்து வீராங்கனை ஆவார். இவர், இந்திய பெண்கள் தேசிய கூடைப்பந்து அணியின் கேப்டனாக 18 ஆண்டுகளாக இருந்துள்ளார். மேலும், ஒன்பது ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய பெண்மணியும் ஆவார். இதுதவிர, தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 30 பதக்கங்களைப் பெற்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.
இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதினை, கடந்த 2021 -ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுள்ளார். இப்படி, பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். அந்த வகையில், அனிதா பால்துரையை கெளரவிக்கும் நிகழ்ச்சி (2021 நவம்பர் 18) தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, பேசிய அனிதா பால்துரை இத்தனை ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியுள்ளேன், என்னிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என அந்நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். அதன்பின்பு, பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அனிதாவிற்கு கார் வழங்கும் பொறுப்பை எங்களது கட்சி ஏற்றுக் கொள்ளும் என உறுதி அளித்து இருந்தார். அதன்படி, அவரின் கனவை நிறைவேற்றும் விதமாக, பா.ஜ.க.வின் நிர்வாகிகளான எம்.என்.ராஜா மற்றும் மாநில துணைத் தலைவரும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு மாநிலத் தலைவருமான அமர் பிரசாத் ரெட்டி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அளித்த உறுதிமொழியின் படி நேற்றைய தினம் (மார்ச்-28) அனிதா பால்துரைக்கு கார் வாங்குவதற்கான மேற்கண்ட தொகை நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்பதுக குறிப்பிடத்தக்கது.