ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொலை செய்த தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவ வீரர் ஆவார். இவரை, நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருக்கும் சின்னச்சாமி மற்றும் அவரது அடியாட்கள் அடித்து கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வின் இந்த அட்டூழியத்தை கண்டித்து இதுவரை எந்த ஒரு கட்சியும் போராட்டம் நடத்தவில்லை. இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இவ்வாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் :
1965-67-ல் உருவான தி.மு.க. கட்சி, தனி மாநிலம் பற்றி பேசியது. அவர்களுக்கு, ராணுவத்தின் மீது மரியாதை கிடையாது. சீருடை அணிந்த யாருக்கும் மரியாதை கிடைக்காது என்பது அவர்களின் கலாசாரத்தில் உள்ளது. தி.மு.க. வெட்கக்கேடானது மற்றும் தீயது. ராணுவ வீரரை தி.மு.க. கவுன்சிலர் தாக்கியும், 6,7 நாட்களாக போலீசார் அமைதியாக இருந்துள்ளனர். ஊடகங்களில் இந்த விவகாரம் வெளிவந்த பிறகே கைது செய்துள்ளனர். இது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளதால், தி.மு.க. இதிலிருந்து பின்வாங்கி வேறு பிரச்சனைகள் குறித்து பேச முயற்சிக்கிறது.
குற்றவாளிகள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு பா.ஜ.க.வின் முன்னாள் ராணுவ பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும், சில நாட்களில் சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவத்தினருடன் சேர்ந்து ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் அறிவித்துள்ளார்.