ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டு தொடர்பாக தமிழக அரசு தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆதாரத்தோடு பதிலடியை கொடுத்து இருக்கிறார்.
பா.ஜ.க. தலைவர் ட்விட்டர் பதிவு இதோ.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பு என்ற திறனற்ற தி.மு.க. அரசின் நாடகத்தை அம்பலப்படுத்த பா.ஜ.க. கடமைப்பட்டுள்ளது. செப்டம்பர் 26: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அக்டோபர் 3: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அதனுடன் ஆன்லைன் விளையாட்டிற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 7: தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
அக்டோபர் 19: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 17: அவசர சட்டத்திற்கு இன்னும் அரசாணை வெளியிடாததால் அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நமது கேள்விகள்.
1. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு, தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை?
2. அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த, “தமிழ்நாடு கேமிங் அதாரிட்டி” உருவாக்கப்பட வேண்டும். இன்றுவரை உருவானதா?
3. அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, மாநில அரசு அரசாணையை அறிவிக்கத் தவறியதாலும், அது காலாவதியாகும் வரை காத்திருந்ததாலும், ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.