டான் டீ நிறுவனம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவினை கண்டித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்திய போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாக கொண்டு ‘டான்டீ’ எனும் தமிழக தேயிலை தோட்ட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 10,949 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, 3,800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2008 – ஆம் ஆண்டில் இருந்து தொடர் நஷ்டத்தில் இந்நிறுவனம் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில், ரூ. 211 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த அக்., 3- ஆம் தேதியில் இருந்து கடும் நிதி நெருக்கடியில் ’டான்டீ’ இயங்கி வருவதாகவும் அந்த நிறுவனத்தின் 5,318 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் விதமாக மாநில அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து, கடந்த நவ., 20 -ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். மாநில அரசால் ‘டான்டீ’ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால், மத்திய அரசிடம் ஒப்படைத்து விடவும் நாங்கள் இதனை பார்த்துக் கொள்கிறோம் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
பா.ஜ.க. தலைவரின் இந்த போராட்டம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழக அரசு ’டான்டீ’ நிறுவனத்தின் நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சாரும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.