சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக உறுப்பினருமான ஏ.மோகன்தாஸ் என்பவர் டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே ஆடு ஒன்றின் கழுத்தில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை படத்தை அணிவித்து, ஆட்டைஇழுத்து வந்து, நடுரோட்டில் அதன்தலையை வெட்டி `அண்ணாமலை ஆடு பலி ஆடு’ என, சிலர் கோஷமிட்டனர். அவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவிபரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே, இச்செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புகார் மனுவை தமிழக உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விலங்குகள் நல வாரியத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.