நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இறுதிவரை திமுக வேட்பாளருக்கு டப் கொடுத்து முடிவில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார் அண்ணாமலை.
இதனால் ஆத்திரமடைந்த இண்டி கூட்டணி ஆதர்வாளர்கள் சிலர் நட்ட நடுரோட்டில் ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி பின்னர் வீச்சருவாளால் ஆட்டின் தலையை ஆக்ரோஷமாக வெட்டி கொடுமை படுத்தி அதன் ரத்தத்தை ரோட்டில் தெளித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுகவினருக்கு அவ்வளவு கோபம் என்றால் என் மேல் கை வையுங்கள். அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம். கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். நான் கோவையில்தான் இருக்கப் போகிறேன். கரூரில் தான் விவசாயம் பார்க்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் என்பவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, இதுபோன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம். மட்டுமல்லாது இது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். அரசியல் கட்சி தலைவர்கள் போட்டோவை அணிவித்து மக்கள் மத்தியில் ரோட்டில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி வாதிட்டார்.
இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி மகாதேவன் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இதுபோன்ற விஷயங்களை ஏற்க முடியாது” என தமிழக அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தது. மேலும், “இவ்விவகாரத்தில் தமிழக அரசு ஒருவார கால அவகாசத்திற்குள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒருவார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.