அரசு பள்ளிகளுக்கு இரண்டு மொழி மட்டுமே அனுமதி என்றால், தனியார் பள்ளிகளில் எதற்கு 3-க்கும் மேற்பட்ட மொழிகள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். அதேசமயம், மாணவர்கள் என்ன படிக்க வேண்டும்? எதை படிக்க வேண்டும்? என்கிற விஷயத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள் தலையிடுவது வெட்கக்கேடான செயல். மும்மொழி கல்விக் கொள்கை நிச்சயம் தேவை என்று கல்வியாளர்கள், சர்வதேச கல்வி நிபுணர்கள், பொதுமக்கள் என பலர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து இருந்தனர்.
மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கும் நபர்கள் தங்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கூற முன்வருவார்களா? ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்வி தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறுவார்களா?அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் தாங்கள் நடத்தும் பள்ளியில் மும்மொழி கற்பிக்கப்படுவதை நிறுத்துவார்களா? ஏழை மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க இவர்கள் யார்? ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி, பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை தெரிவித்து விட்டு அதன்பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதே சரியானது என்று பிரபல பெண் அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் சாட்டையடி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் ஹிந்தி மொழி குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்திருந்தார். அரசு பள்ளிகளுக்கு இரண்டு மொழி மட்டுமே அனுமதி என்றால், தனியார் பள்ளிகளில் எதற்கு 3-க்கும் மேற்பட்ட மொழிகள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.