தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்வராவது உறுதி என்று தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பேரரசு தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர் பேரரசு. தமிழ்த் திரையுரகில் நடிகர் விஜய், அஜித், அர்ஜூன், விஜயகாந்த் ஆகிய நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். சிவகாசி, திருப்பாச்சி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை என ஊர் பெயர்களையே படங்களின் டைட்டிலாக வைத்து வெற்றி பெற்றவர். குறிப்பாக, திருப்பாச்சி, சிவகாசி ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
பின்னர், தமிழத் திரையுலகின் போக்கு திசை மாறியதால் மெல்ல மெல்ல திரையுலகில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். இதன் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார். 2020-ம் ஆண்டு பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் இயக்குனர் பேரரசு. தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் பேரரசு, நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தார்.
இந்த நிலையில்தான், தற்போதைய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது என்றும், இதை பா.ஜ.க. தலைமை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேரரசு, “தி.மு.க.வில் அண்ணாதுரை, கருணாநிதி போன்ற மிகத் திறமையான பேச்சாளர்கள் இருந்தனர். அ.தி.மு.க.வில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்கள் மனதில் பதிந்த மிகப்பிரபலமான முகமாக இருந்தார். ஆனால், பா.ஜ.க.வில் இதுபோன்ற பேச்சாளர்களும் இல்லை, எம்.ஜி.ஆர். போல மக்களுக்கு நன்கு அறிமுகமான முகங்களும் இல்லை.
இந்த சூழலில், தற்போது பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இவரை தமிழக மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இவர் எங்கு சென்றாலும் தமிழக மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். ஆகவே, அண்ணாமலையை தமிழக முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராவார்” என்று கூறியிருக்கிறார். இவரது கருத்தை பா.ஜ.க.வினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் காமராஜரோடு அண்ணாமலையை ஒப்பிட்டு பேரரசு பேசியது குறிப்பிடத்தக்கது.