இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி (12.11.2023) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வெளியூரில் இருந்து பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி வழக்கமாக தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை தவிர்த்து 10 ஆயிரத்து 975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என சென்னையில் இருந்து மட்டும் 5 இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளன. அதே போன்று தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு திரும்பி செல்ல ஏதுவாக நவம்பர் 13 ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் எந்தெந்த இடத்தில் இருந்து இயக்கப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
பூவிருந்தவல்லி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஒசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி கன்னியாகுமரி, தூத்துக்குடி கன்னியாகுமரி விழுப்புரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, உதகமண்டலம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்ற விபரம் வெளியாகியுள்ளது.