அருள்மிகு துர்க்கையம்மன் திருக்கோயில் ஒயிட்ஸ் ரோடு, சென்னை, இராயப்பேட்டையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னையில் துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்திருப்பது இத்திருத்தலமே. மேலும் மூலவர் துர்க்கை அம்மன் வடக்கு திசை நோக்கி இருப்பது தனிப்பட்ட சிறப்பாகும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றி வழிப்பட்டால், மகப்பேறு உண்டாகும். திருமணத்தடைகள் நீங்கும். கஷ்டம் தீரும். பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, தசமி ஆகிய தினங்களில் வழிப்பட்டால் தடைப்பட்ட காரியங்கள் நீங்கி குடும்பத்தின் மகிழ்ச்சி பெறுகும் என்பது நம்பிக்கை. இதனால் அக்கோவிலுக்கு பக்தர்கள் பலரும் தரிசித்து செல்கின்றனர்.
இத்தனை சிறப்புமிக்க கோவிலை தமிழக அரசு இடிக்க போவதாக தெரிவித்துள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
சென்னை ராயப்பேட்டையில், சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ துர்க்கையம்மன் திருக்கோயில் ராஜகோபுரத்தையும், ஶ்ரீ ரத்தின விநாயகர் ஆலயத்தையும், மெட்ரோ பணிகளுக்காக இடிக்க இந்து மத விரோத திமுக அரசு முடிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவினர் சொத்துக்கள் அமைந்திருக்கும் பகுதிகளை அரசுப் பணிகளுக்காகக் கையகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிப்பாரா? அறிவாலயத்துக்குள் அமைந்திருக்கும் திறந்த வெளி நிலத்தை, பூங்காவாகப் பராமரிக்கிறோம் என்று கூறிக் பல ஆண்டு காலமாக, சிலைகளை வைப்பதும், வாகன நிறுத்தமாகவும் பயன்படுத்தி வந்ததையும், அந்த இடத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் திமுக தாமதப்படுத்தியதையும் பொதுமக்கள் மறக்கவில்லை.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வரைவறிக்கை தயாரிக்கும்போதே, ஆலயங்களின் தொன்மையைக் கருதி, மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கைக் கையாண்டு வரும் திமுக, இதனை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதாகவே தெரிகிறது.
பொதுமக்களுக்காகவே திட்டங்களே தவிர, பொதுமக்கள் நம்பிக்கையைச் சிதைப்பதற்காக அல்ல என்பதை திமுக அரசுக்கு நினைவுபடுத்தி, உடனடியாக, தொன்மை வாய்ந்த ஆலயங்களை இடிக்க முயற்சிப்பதை நிறுத்தி விட்டு, மாற்றுப் பாதையில் மெட்ரோ பணிகளைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.