உரிய தகுதியில்லாத செவிலியர்களை பணி நியமனம் செய்ததாக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குனர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிறப்பித்த அரசாணயை எதிர்த்து 977 செவிலியர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, செவிலியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 977 ஒப்பந்த செவிலியர்களை முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்களில் நியமிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பிறகு உருவாகும் காலியிடங்களில் படிப்படியாக செவிலியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை மீறி தகுதியான செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்காமல் தகுதியில்லாத 963 செவிலியர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டு குறுக்கு வழியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியமர்த்தி உள்ளதாக கூறி, நமக்கு நாமே செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செந்தில்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் பிரமுகர்கள் பலர் சம்மந்தப்பட்டுள்ளதால் தனது புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அஜராகி, பணியாளர் நியமனம் தொடர்பாக பாதிக்கப்படாத மூன்றாவது நபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது, என தெரிவித்தார். அரசின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு தள்ளிவத்தார்.