ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப் பிரிவு 370 கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த
சட்டப் பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது நீதிமன்றம் டிசம்பர் 11 நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ குடியரசு தலைவர் ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மோடி, அமித்ஷா என பலரும் வரவேற்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்த தீர்ப்பை வரவேற்று, சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டத்தக்கது. இந்த முடிவை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் வரவேற்கிறது. ஆரம்பத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது சட்டப்பிரிவு 370ஐத் திணிப்பதை எதிர்த்து, அதையே பல தீர்மானங்கள் மூலம் நிறைவேற்றி, பிரச்சினையுடன் தொடர்புடைய அனைத்து இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றது. இந்த முடிவு தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த உதவும். ஜம்மு காஷ்மீர் மக்கள் 370வது பிரிவின் மூலம் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த அநீதியிலிருந்து இறுதியாக விடுதலை பெற்றுள்ளனர். இவ்வாறு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் ஸ்ரீ சுனில் அம்பேகர் குறிப்பிட்டுள்ளார்.