கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த தருணத்தில், மத்திய அரசு எத்தனையோ வழிகளின் மூலமாக, இரண்டாவது அலையைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் நேரத்தில், அண்மைக் காலமாக, எதிர்கட்சிகள் தொடர்ந்து மத்திய மோடி அரசை, குற்றம் சாட்டுவதை, வழக்கமாக கொண்டு இருக்கின்றது. ஊடகங்களும், உண்மை செய்தியை முழுமையாக வெளியிடாமல், எதிர்கட்சிகள் கூறி வரும் பொய் குற்றச்சாட்டுகளை வெளியிடுவதிலே, வழக்கமாக கொண்டு இருப்பது வேதனை அளிக்கின்றது. அதிலும், தமிழகத்தில் நடக்கும் அவலங்களை கோடிட்டு காட்டாமல், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே, கொரோனா மரணங்கள் நடப்பது போன்ற, ஒரு பிரமையை ஏற்படுத்தி வருவது, வாசகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை வெளி மாநிலத்திற்கு தரக்கூடாது என அரசியல் கட்சிகள் கூறுவதும், வெளிமாநிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஆக்ஸிஜனை, நமது மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டதை பெருமையாக பட்டியலிடுவதும், தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள்.
இரண்டாவது அலை:
2021 ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள காலக்கட்டத்தில், நாடு முழுவதும் சேர்த்து, சராசரியாக ஒரு நாளில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மட்டுமே. 2020 அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெரும்பாலான நாடுகளில் இரண்டாவது அலையாக, கொரோனா பரவல் வந்து போனது. மத்திய அரசின் துரித செயல் பாட்டால், இந்தியாவில் மட்டும், இரண்டாவது அலை, அந்தக் கால கட்டத்தில் தடுத்து நிறுத்தப் பட்டது என்பதே உண்மை. தடுக்கப்பட்டது என்பதை விட தள்ளிப் போடப்பட்டது என்பதே நிதர்சனம்.
இன்று, மத்திய அரசை விமர்சிப்பவர்கள், இரண்டாவது அலை தள்ளிப் போனதைப் பற்றி பெருமையாக பேசினார்களா? மத்திய அரசின் செயல் பாடுகளை, எதிர்ப்பதை மட்டுமே, எப்போதும் கடைப்பிடிப்பவர்கள், இப்போதும் அதைத் தான் செய்து வருகின்றனர்.
அன்றைய காலக்கட்டத்தில், பிபிசியில் (BBC) வெளியிடப்பட்ட, கட்டுரையில், இந்தியாவில் கொரோனா முடிவுக்கு வந்ததா? என பாராட்டும் வகையில், எழுதி இருந்தது. அந்த அளவிற்கு, மத்திய அரசு பரவலைக் கட்டுப்படுத்தியது என்பதே உண்மை. நமது நாட்டில், கொரோனா பரவல் முடிந்து போய் விட்டது என பல நாடுகளும், உலக அளவில் பிரபலமான செய்தித்தாள்களான “தி வாஷிங்டன் போஸ்ட்”, “நியூயார்க் டைம்ஸ்” போன்ற பத்திரிக்கைகளும் இரண்டாவது அலையில் இருந்து, நமது நாடு தப்பித்து விட்டது என்று புகழ்ந்து பாராட்டியது.
மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு 17 சுற்றறிக்கையை, மாநில அரசிற்கு அனுப்பி இருந்தது. அதில், கொரோனா இரண்டாவது தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும் எனவும், மாநில அரசு மிகவும் கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. மேலும், மார்ச் 17, 2021 அன்று மாநில முதலமைச்சர்களிடம் பேசிய பிரதமர் மோடி அவர்கள், மாநில அரசுகள் மெத்தனமாக இல்லாமல், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில், முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும், அறிவுறுத்தி இருந்தார். இரண்டாவது அலை நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது எனவும், வென்று விட்டோம் என நினைத்து விடாமல், அதை எப்படி ஒழிக்க வேண்டும் என ஆராய்ந்து முழு வீச்சில் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
மாநில அரசு நன்றாக செய்தால், எல்லா பெருமையும், எடுத்துக் கொள்ளும். ஆனால், மாநில அரசு தவறு செய்யும் போது, தன்னுடைய தவறுகளை மறைக்க, முழு பொறுப்பையும் மத்திய அரசு மீது போட்டு விடும்.
தடுப்பூசி தயாரிக்கும் பணி:
பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் தான் இரண்டாவது அலை ஆரம்பமாயிற்று. அந்த காலத்தில், இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது.
“கோவாக்சின்” என்பது நமது நாட்டில், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. அந்த தடுப்பூசிக்கு எதிராக, சந்தேக விதைகளை நமது நாட்டின் அரசியல்வாதிகள் தூவி வந்தார்கள்.
“கோவிஷீல்ட்” புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் இணைந்து, 2DG என்ற ஒரு மருந்தை தயாரித்து இருக்கின்றார்கள். அது தூள் (பவுடர்) வடிவில் இருக்கும். அதை நீரில் கரைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்ல பலனைத் தருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் குமார், வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை அனைத்து இந்தியர்களுக்கும், தடுப்பூசி போடும் வகையில், 216 கோடி டோஸ் தயாரிக்கப் பட்டு இருக்கும் என அறிவித்து இருக்கிறார்.
உள்நாட்டு தயாரிப்புகளைத் தடுத்து வந்த காங்கிரஸ்:
2008 ஆம் ஆண்டு, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு, 3 அரசு தடுப்பூசி நிறுவனங்களை இழுத்து மூடியது.
நமது விஞ்ஞானிகள் தயாரித்த மருந்தை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியினர், வெளி நாட்டு மருந்துகளை ஏதேனும் விமர்சனம் செய்து இருக்கிறார்களா? நமது விஞ்ஞானிகள் மீது, நாமே நம்பிக்கை வைக்காமல் இருந்தால் எப்படி?
2013 ஆம் ஆண்டு, பாரத் பயோடெக் நிறுவனம், மூளை காய்ச்சல் (Encephalitis) நோய்க்கான தடுப்பூசி மருந்தை, உள்நாட்டில் தயாரித்தது. அந்த காலக்கட்டத்தில், மத்திய காங்கிரஸ் அரசு சீனாவில் இருந்து, தடுப்பூசிகள் இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகித்தது. நமது நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருந்தை உபயோகிக்காமல், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து உபயோகித்தது, நமது நாட்டு விஞ்ஞானிகள் மீது நமக்கே நம்பிக்கை இல்லாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
தற்போது, கொரோனா பரவிய ஒரு வருடத்திற்குள், உலக அளவில், தடுப்பூசியை தயாரித்த 12 நாடுகளில், நமது நாடும் ஒன்றாகும், என நினைக்கும் போது, “இந்தியனாக” மிகவும் பெருமை அளிக்கிறது.
கொரோனா பரவலுக்கு கும்பமேளா காரணமா?
கும்பமேளா தொடங்கிய ஏப்ரல் 1ஆம் தேதி, நாடு முழுவதும் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 72,000. இதில் 76% பேர் சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், கேரளா, கர்நாடகம், டெல்லி, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் உள்ளடக்கியது. இந்த ஆறு மாநிலங்களுக்கும், கும்பமேளாவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. கும்பமேளா தொடங்கிய உத்தரகாண்ட் மாநிலத்தில், ஏப்ரல் 1 அன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டது வெறும் 213 பேர் மட்டும் தான்.
கும்பமேளா நிறைவடைந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 1,100 மட்டுமே. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க கும்பமேளா பாதியிலேயே முடிவடைந்தது.
டெல்லியில் மாதக்கணக்கில் முகாமிட்டு, போராட்டம் செய்த விவசாயிகளைப் பற்றி, யாரும் எதுவும் பேசாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, எதிர் கட்சிகளின், ஒரு சார்புத் தன்மையை கோடிட்டு காட்டுகின்றது.
ஹிந்து மதப் பண்டிகையான கும்பமேளாவை காரணம் சொல்பவர்கள், அண்மையில் நடந்த மற்ற மத பண்டிகைக்கு கூடிய கூட்டத்திற்கு எதுவும் சொல்லவில்லையே? அங்கு கூடிய கூட்டத்தை சமூக வலைதளங்களில் பார்த்த போது, எந்தவித கட்சியும், எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வில்லையே.. ஏன்? இந்து மதத்திற்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல் தான் காரணமா?
தேர்தலை குற்றம் சாட்டும் அனைவரும், தேர்தல், தற்போது வேண்டாம், என ஏன் சொல்லவில்லை. 2020 ஆம் ஆண்டு, பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, பாஜகவினர், தேர்தல் பொதுக் கூட்டத்தை தவிர்க்க வேண்டுமென, தேர்தல் கமிஷனுக்கு யோசனை தெரிவித்தது. சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யலாம், என்ற கருத்தை தெரிவித்து இருந்தது. மற்ற கட்சிகள் அனைத்தும், அந்த யோசனையை கடுமையாக எதிர்த்தது. மேலும் இது தவறான அணுகுமுறை என சுட்டிக் காட்டியது.
மேற்கு வங்காளத்தில் மம்தாவுக்கு கூடிய கூட்டத்தின் போது, பரவாத கொரோனா,
கேரளத்தில் ராகுல்காந்தி கூடிய கூட்டத்தின் போது பரவாத கொரோனா,
மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடிய கூட்டத்தின் போது பரவாத கொரோனா,
பாஜகவினருக்கு கூடிய கூட்டத்தின் போது மட்டும் பரவியது என கூறுவது, எதிர் கட்சிகளின், ஒரு சார்புத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
தேர்தல் நடக்காத கர்நாடகம், மகாராஷ்டிரம், டெல்லியில் தான் கொரோனா பரவல் அதிகம் உள்ளது, அதைப் பற்றி, யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
குஜராத், உத்தரபிரதேசம் என பாஜக ஆளும் மாநிலத்தைத் தேடித்தேடி கண்டுபிடித்து, செய்திகள் போடும் தொலைக் காட்சிகளும், நாளிதழ்களும், எதிர் கட்சிகள் ஆளும் மாநிலத்தில் நடக்கும் இறப்புகளைப் பற்றி, முதல் பக்கத்தில் செய்தி போட்டு இருக்கின்றார்களா? அங்கு நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றனரா?
காங்கிரஸ் டூல் கிட்:
நமது நாட்டை அவமானப்படுத்தும் விதமாக, மத்திய அரசை குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, புதுப் பெயருடன் அழைக்க, காங்கிரஸ் கட்சி, தன்னுடைய தொண்டர்களுக்கு கட்டளையிட்டு இருந்தது, என சமீபத்தில் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றது. அதில், பாரத பிரதமரின் பெயரை அவதூறாகப் பயன்படுத்தி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றியும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களைப் பற்றியும், கொச்சைப் படுத்தும் விதமாக, நமது நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு, இழுக்கு ஏற்படும் வகையில், தங்களுடைய கட்சியினரை, சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பரவ விடுமாறு, காங்கிரஸ் கட்சி, தனது கட்சித் தொண்டர்களுக்கு, அறிவுறுத்தி இருந்தது. அதைப் பார்த்ததும், இளைய சமுதாயத்தினர் மிகவும் கோபம் கொண்டு, நமது நாட்டை இப்படி அசிங்கப் படுத்துகின்றார்களே காங்கிரஸ் கட்சியினர், என கோபம் கொண்டனர். அதனால் தான், அவர்கள் நிறைய மாநிலத் தேர்தலில், படுதோல்வி அடைந்தனர் எனவும், கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக் போல, எல்லா அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஒன்று சேர்ந்து, மத்திய அரசுக்கு கைகொடுத்து, மாநில – மத்திய அரசுகள் ஒன்றிணைந்து போராடினால், நிச்சயமாக நல்ல பலன் அளிக்கும்.
புதிய தலைமுறையின் பொய் செய்தி:
சீரம் நிறுவனத் தலைவர் பூனாவாலா, சமீபத்தில் அளித்த அறிக்கையில், “உலகம் முழுக்க உள்ள மக்களுக்கு, தடுப்பூசி போட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறியதை, நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்” என செய்திகளை திரித்து வெளியிட்ட புதிய தலைமுறைக்கு, நிறைய பேர், தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
பொய் செய்தியை தவிர்த்து…
உண்மையான செய்திகளை வெளியிடுமா ஊடகங்கள்?
- அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai