மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரோமன் கத்தோலிக்க பிஷப் ஒருவருக்கு 4 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அர்ஜென்டினா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது.
கிறிஸ்தவ மத பாதிரியார்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கேரளாவில் சமீபத்தில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல, இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் பாதிரியார்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அர்ஜென்டினாவில் வாய் பேச முடியாத மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பாதிரியார்களுக்கு 40 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்தான், அதே அர்ஜென்டினாவில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அர்ஜென்டினா நாட்டின் ஓரான் நகரிலுள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையில் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பிஷப்பாக இருந்தவர் குஸ்டாவோ ஜான்செட்டா. இவர், அங்கு படித்த மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அச்செய்தியில், ஜான்செட்டா அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும், நிதி முறைகேடு மற்றும் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஜான்செட்டா மீதான குற்றச்சாட்டுகளை வாடிகனில் இருக்கும் போப் பிரான்சிஸ் நிராகரித்தார். அதோடு, இக்குற்றச்சாட்டால் அர்ஜென்டினாவிலிருந்து வெளியேறிய அவருக்கு வாடிகனிலேயே ஒரு நல்ல வேலையையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், ஜான்செட்டா தனது செல்போனில் ஆபாசப் படங்களை வைத்திருப்பதாகவும், சில மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் தேவலாய அதிகாரிகளிடம் 5 பாதிரியார்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, பாதிரியார் ஜான்செட்டா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழுவின் விசாரணை என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவிகள் பாதிரியார் மீது அர்ஜென்டினா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பாதிரியாருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.