ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : திமுக நிர்வாகியின் மகன் கைது செய்து சிறையில் அடைப்பு !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : திமுக நிர்வாகியின் மகன் கைது செய்து சிறையில் அடைப்பு !

Share it if you like it

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு ரூ.1 கோடிவரை பணம் கைமாறி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர். இந்த வழக்கில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலு, திருவேங்கடம் ஆகியோர் உட்பட 11 பேரை கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். அவர்களை 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததோடு, முதல் தாக்குதல் நடத்தியது திருவேங்கடம் என்பது தெரியவந்தது. கடந்த 14-ம் தேதி அதிகாலை மணலிக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது நடந்த என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார்.

மீதம் உள்ள 10 பேரிடமும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர். பின்னர், அனைவரையும் நேற்று முன்தினம் போலீஸ் காவல் முடிந்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக அவர்கள் மற்றும் அவர்களது தொடர்புடையவர்களின் வங்கி கணக்கு விபரங்களும் செல்போன் விபரங்களும் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கொலை செய்தவர்கள் யார் யாருடன் எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் பேசி உள்ளனர்.எதிர்முனையில் பேசியவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த மாதிரியான தொடர்பு இருந்துள்ளது என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும் விசாரிக்கப்பட்டது.

இதில், கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி வரை பணம் கைமாறி இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு பெண் வழக்கறிஞரிடமும் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் அரசியல் புள்ளி ஒருவர், பக்கபலமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. அந்த கோணத்திலும் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பொன்னை பாலு உட்பட சிறையில் உள்ள மேலும் சிலரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கையும் தொடங்கி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்களான சென்னை ஜாம் பஜாரை சேர்ந்த மலர்கொடி, செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், மலர்கொடியின் கணவர் பிரபல தாதாவாக வலம் வந்தவர் எனக் கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *