திருவண்ணாமலை நகரில் உள்ள சாரோன் பகுதியில் செயல்பட்டு வரும் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ரமேஷ் என்பவரிடம் சொத்து வரி மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள தாளகிரி ஐயர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் சொத்து வரி மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்காகத் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளரிடம் ஜனவரி மாதம் மனு கொடுத்ததாகத் தெரிகிறது, இதுசம்பந்தமாக விசாரணை செய்த வருவாய் ஆய்வாளர் செல்வராணி மற்றும் வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோர் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
பின்னர் தொடர்ந்து நேற்று வருவாய் உதவியாளர் ராகுல், ரமேஷிடம் கடைசியாக லஞ்சம் 30,000 கொடுத்தால் போதும் உங்களது பெயர் மாற்றம் உடனே ஆய்வாளர் மூலமாகப் பரிந்துரை செய்து விடுகிறோம் என்று பலமுறை போன் செய்து தொந்தரவு செய்ததாக நேற்று முன்தினம் 28ஆம் தேதி மாலை லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகனை அணுகி ரமேஷ் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வருவாய் ஆய்வாளர் செல்வராணி மற்றும் வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோரிடம் ரமேஷ் ரூ.30 ஆயிரம் கொடுக்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.