திருக்கோவிலூர் திருவிக்ரம பெருமாள் கோவில்
மூலவர் – திரு விக்ரமர்
உற்சவர் – ஆயனார் – கோவலன்
தாயார் – பூங்கோதை நாச்சியார்
தலவிருட்சம் – புன்னை மரம்
தீர்த்தம் – பெண்ணாறு – கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ சக்ரா குளம் .
ஸ்தல புராணம் :
அசுர வம்சாவளி மன்னனான மாபலி சக்கரவர்த்தியின் அதர்ம போக்கையும் அகம்பாவத்தையும் அடக்கி தர்மத்தை நிலை நிறுத்தும் படியான வாமன அவதாரம் தான் திரு விக்ரமர் என்னும் உலகளந்த பெருமாள் அவதாரம். யாசகம் கேட்டு நிற்கும் அந்தண சிறுவனாக வந்திறங்கி மூன்றடி நிலம் யாசகமாக பெற்று கண்ணிமைக்கும் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்து ஓரடியில் மண்ணையும் இரண்டாமடியில் விண்ணையும் அளந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் எழுந்து நின்றவர் சொன்னபடி மூன்றாம் அடி நிலம் எங்கே என்று கேட்டு மாபலி சக்கரவர்த்தியின் சிரசையே மூன்றாம் அடியாக அர்ப்பணிக்க அவனது சிரசில் பாதம் பதித்து அவனை பாதாளத்தில் அமர்த்தி அவனுக்கு மோட்சம் நல்கியவர்.
வாமன அவதாரம் கேரள மாநிலத்தின் நிலப்பகுதியில் நிகழ்ந்தது என்றாலும் உலகம் முழுவதிலும் உள்ள இந்து மக்கள் இதை வாமன அவதாரமாகவும் கேரள மக்கள் திருவோண பண்டிகையாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த திருவோணம் பண்டிகையின் புராணத் தொடர்பான வாமன அவதாரத்தை உலகளந்த பெருமாளாக விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்த நின்ற விஷ்ணு பகவானின் திருக்கோலங்கள் பல்வேறு ஆலயங்களில் இன்றளவும் திரு விக்ரமராக காட்சி கொடுக்கிறார்.
தான் மோட்சம் பெற்ற இந்த நன்னாளை மக்கள் அனைவரும் திருவிழாவாக பண்டிகையாக கொண்டாடி மகிழ வேண்டும் அதை ஆண்டு தோறும் விண்ணிலிருந்து இறங்கி வந்து அரூப வடிவில் தான் கண்டு மகிழ்ந்து அவர்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் நாராயணனிடம் விருப்ப வரம் பெற்றான் மாபலி சக்கரவர்த்தி. இன்றளவும் அறுபடியும் தங்களை வந்து ஆசீர்வதிப்பதாக மக்கள் நம்புகிறார்கள் .அதன் வழியில் தான் திருவோணத் திருநாளில் மாபலி சக்கரவர்த்தியையும் வாமன அவதாரமான நாராயணனையும் வரவேற்கும் பொருட்டு கனி காணும் விசேஷ பூஜைகள் என்று திருவிழா களை கட்டுகிறது.
பொய்கை ஆழ்வார் – பூதத்தாழ்வார் – பேயாழ்வார் என்னும் முதல் மூன்று ஆழ்வார்கள் முக்தி அடைந்த தலமாக கருதப்படும் திருக்கோவிலூர் தமிழ்நாட்டின் மூன்றாவது உயரமான 192 அடி உயர கோவில் கோபுரம் கொண்டுள்ளது. ஆயிரம் முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக சொல்லப்படும் இந்த கோவில் ஐந்து பெரும் கோபுரங்களை உடையது.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த திருக்கோவில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக தெரிகிறது . பின்னர் விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் பங்களிப்புடன் பின்னாளில் விஸ்தரிக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கிறது. இங்கு விநாயகர் முருகர் பிரம்மதேவன் விஷ்ணு துர்க்கை லட்சுமி நரசிம்மர் சன்னதிகளும் உண்டு. இந்த ஆலயத்தில் துர்க்கைக்கு வஸ்திரம் சாற்றுவதும் சிறப்பு. சக்கரத்தாழ்வார் கருட ஆழ்வார் அனுமன் சன்னதிகள் உண்டு.
பிரதி மாதம் ஏகாதசி திதி – திருவோணம் நட்சத்திரம் – சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் உண்டு. ஆண்டிற்கு பன்னிரு திருவிழாக்கள் கொண்டாடப்படும் பெரும் திருவிழா கோவிலாகும். தமிழ் வருட பிறப்பு – உத்திராயண தொடக்கம் – தட்சிணாயண தொடக்கம் – திருவோண பண்டிகை – வைகுந்த ஏகாதசி திருநாள் – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – பவித்ர உற்சவம் – கருட சேவை – மாசி மகம் – பங்குனி பிரம்மோற்சவம் – நவராத்திரி என்று ஆண்டு முழுவதும் ஆலயத்தில் திருவிழாக்கள் களை கட்டிய வண்ணம் இருக்கும்.
தினமும் ஆறு முறை கோவில் சடங்கு பூஜைகள் நடைபெறும். கோவில் நடை அதிகாலை 5 மணி முதல் இரவு 9 முறை திறந்திருக்கும். இடையில் ஆறு கால பூஜை சடங்குகள் இடைவெளி காரணமாக அவ்வப்போது நடை சாற்றப்பட்டு சில நாழிகைகளில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படும்.
கோவில் அமைவிடம் :
தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை – விழுப்புரம் மார்க்கத்தில் திருக்கோவிலூர் நகரில் பிரதான பகுதியில் திரு விக்ரமர் ஆலயம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை – விழுப்புரம் – திண்டிவனம் – வேலூர் பகுதிகளில் இருந்து நேரடி போக்குவரத்து வசதி உண்டு. திருவண்ணாமலை – விழுப்புரம் மார்க்கத்தில் போக்குவரத்து ரயில் வசதிகள் திருக்கோவிலூர் மார்க்கத்திலேயே அமைவதால் எளிதில் சென்றடையலாம்.
உலகளந்த பெருமாள் என்ற பெயரில் விஸ்வரூபம் காட்டும் விஷ்ணுவின் திருக்கோலம் கேரள தமிழக பகுதிகளில் பல்வேறு ஆலயங்களில் இருந்தாலும் திருக்கோவிலூர் – காஞ்சிபுரம் – திரு பரமேஸ்வர மங்கலம் உள்ளிட்ட வைணவ திவ்ய தேசங்களில் குறிப்பிட்ட ஆலயங்கள் பெரும் புராணத் தொடர்புகளும் ஆன்மீக அதிர்வுகளும் உடையவை .அந்த வகையில் திருக்கோவிலூர் திரு விக்ரம உலகளந்த சுவாமி ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. அசுரனை அடக்கி தர்மத்தை நிலை பெறச் செய்த திருஓணத்திருநாளின் சாநித்தியமான திரு விக்ரம சுவாமியை இந்த திருவோண நன்னாளில் வணங்கி நலமும் வளமும் பெறுவோம் .