காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) விலகிய மூத்த தலைவர் அசோக் சவான் இன்று பகல் மும்பை பாஜக அலுவலகத்துக்குச் சென்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். முன்னதாக 48 மணி நேரத்தில் தனது அடுத்தக்கட்ட நகர்வை அறிவிப்பதாக அசோக் சவான் கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸில் இருந்து விலகிய அடுத்த நாளை அவர் பாஜகவில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியது. இது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 27-ல் மகாராஷ்டிராவில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சவானின் விலகல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
மேலும் அவருடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூர்கரும் பாஜகவில் இணைந்தார்.
மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.