அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நஜிரா கெலேகி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணின் அந்தரங்க உறுப்பை, டாக்டர் சஹத்துல்லா வீடியோ எடுத்து வைரலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலம் லக்ஷ்மிஜன் தேயிலை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், நஜிரா கெலேகி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த சுகாதார அதிகாரி டாக்டர் சஹத்துல்லா, அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். மேலும், சிகிச்சையின்போது அப்பெண்ணின் அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர், அந்த வீடியோவை சுகாதார மையத்தின் டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய குழுவில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையறிந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து டாக்டர் சஹத்துல்லாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவத்தை கண்டித்து சுகாதார நிலைய ஆஷா பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, கர்ப்பிணி பெண்களின் அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து வெளியிடும் டாக்டர் சஹத்துல்லா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குனரகத்துக்கும் ஆஷா பணியாளர்கள் மனு அளித்தனர். அதேபோல, அஸ்ஸாம் தேயிலை பழங்குடியின மாணவர் சங்கமும் டாக்டர் சஹத்துல்லாவுக்கு எதிராக கெலேகி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.
மேலும், டாக்டரின் வெட்கக்கேடான செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம், இது மருத்துவ நெறிமுறைகளை மீறும் செயல். ஆகவே, மருத்துவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இனி காவல்துறையால் மட்டுமே நீதி வழங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் கெலாகி போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.