ஜிகாதி நடவடிக்கையால் மதகுரு கைது: ஆவேசத்தில் மதரஸாவை இடித்த மக்கள்!

ஜிகாதி நடவடிக்கையால் மதகுரு கைது: ஆவேசத்தில் மதரஸாவை இடித்த மக்கள்!

Share it if you like it

அஸ்ஸாமில் ஜிகாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மதகுரு கைது செய்யப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கினர். ஜிகாதி நடவடிக்கைகளால் அஸ்ஸாமில் இடிக்கப்படும் 4-வது மதரஸா இது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் மத்தியா காவல் நிலைய பகுதியில் உள்ளது தாரோகர் அல்கா பகியுரா சார் மதரஸா. இந்த மதரஸாவை ஜலாலுதீன் ஷேக் என்கிற மதபோதகர் நடத்தி வந்தார். இந்த மதரஸாவில், அமினுல் இஸ்லாம் என்ற உஸ்மான் மற்றும் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோர் 2020-ம் ஆண்டு முதல் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த அறிவார்ந்த ஆசிரியர்கள் என்று உள்ளூர் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இருவரும் பங்களாதேஷில் இயங்கி வரும் வங்காளதேச அல் கொய்தா (AQIS) மற்றும் அன்சாருல் பங்களா குழு (ABT) ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில்தான், இந்த மதரஸாவில் இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும், ஜிகாதி நடவடிக்கைகளுக்காக இஸ்லாமிய இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் மத்திய உளவுப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய உளவுப்பிரிவு போலீஸார், மாநில உளவுப் பிரிவு போலீஸாருடன் இணைந்து மதரஸாவை கண்காணித்து வந்தனர். அப்போது, மேற்கண்ட மதரஸாவில் ஜிகாதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய உளவுப்பிரிவு போலீஸாரின் புகாரின் பேரில், மாநில போலீஸார் கடந்த மாதம் 20-ம் தேதி ஜலாலுதீனை கைது செய்தனர். இதையறிந்த மதரஸா ஆசிரியர்கள் அமினுல் இஸ்லாம், ஜஹாங்கீர் ஆலம் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த விஷயம் உள்ளூர் மக்களுக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கினர்.

அஸ்ஸாமை பொறுத்தவரை, ஜிகாதி நடவடிக்கை காரணமாக கடந்த 4 வாரங்களில் மட்டும் இடிக்கப்பட்ட 4-வது மதரஸா இதுவாகும். மோரிகான் மாவட்டம் மொய்ராபரியில் இருந்த ஜாமியுல் ஹுதா மதரஸா, ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் முதலாக இடிக்கப்பட்டது. தொடர்ந்து, பார்பெட்டா மாவட்டம் ஹவ்லியில் இருந்த ஜாமியுல் ஹுதா அகாடமி மதரஸா ஆகஸ்ட் 29-ம் தேதி இடிக்கப்பட்டது. மூன்றாவதாக, போங்கைகான் மாவட்டத்தில் இருந்த மர்கசுல் மா-ஆரிஃப் குவாரியானா மதரஸா ஆகஸ்ட் 31-ம் தேதி இடிக்கப்பட்டது. ஆனால், மேற்கண்ட 3 மதரஸாக்களும் அரசு அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. அதேசமயம், தற்போது இடிக்கப்பட்ட மதரஸா மக்களால் இடிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய கோல்பாரா மாவட்ட எஸ்.பி. வி.வி.ராகேஷ் ரெட்டி, “தற்போது மக்களால் இடிக்கப்பட்ட மதரஸாவுக்கும், ஏற்கெனவே இடிக்கப்பட்ட பார்பெட்டா, மோரிகான், போங்கைக்கான் மதரஸாக்களும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்திருக்கிறது. இடிக்கப்பட்ட எல்லா மதரஸாக்களிலும் ஜிகாதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும், பங்களாதேஷ் நாட்டில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த பயங்கரவாத ஸ்லீப்பர் செல்கள் அஸ்ஸாமின் பல்வேறு மாவட்டங்களில் தளங்கள் அமைத்து செயல்பட்டு வருவதாக நாங்கள் உணர்கிறோம். ஆகவே, நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்” என்றார்.


Share it if you like it