அஸ்ஸாமில் அல்கொய்தாவுடன் தொடர்பில் இருந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அஸ்ஸாமில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பலருக்கும் அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பது சமீபத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அஸ்ஸாம் ஜிஹாதி நடவடிக்கைகளின் மையமாக மாறிவிட்டது. ஆகவே, அஸ்ஸாமில் உள்ள மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் உள்ள மத போதகர்கள் வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்தால், அவர்களைப் பற்றிய விவரங்களை அரசு போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். மதரஸாக்கள் ஜிகாதி வேலைக்கு பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே எங்களின் ஒரே நோக்கம்” என்று கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை, லோக்கல் போலீஸார் உதவியுடன் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாமிய மதபோதகர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், கைது செய்யப்பட்ட இஸ்லாமிய மதகுருக்குள் நடத்தி மதரஸாக்கள் அரசால் இடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 4 மதரஸாக்கள் இடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவும், துணைக் கண்டத்தில் உள்ள அல்கொய்தாவின் துணை அமைப்பான அன்சருல்லா பங்களா டீமுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் அஸ்ஸாமில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முசாதிக் உசேன் மற்றும் இக்ராமுல் இஸ்லாம் ஆகிய இருவரையும் மோரிகான் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர்களில் இக்ராமுல் ஒரு இமாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட முஃப்தி முஸ்தபா என்ற மதகுருவால் இருவரும் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.