ஹரியானா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் கிரன் சவுத்ரி தனது மகள் ஸ்ருதி சவுத்ரி மற்றும் ஆதரவாளர்களுடன் நேற்று (ஜூன்.19) பாஜகவில் இணைந்தார். தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி, மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருன் சுக் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
கிரன் சவுத்ரி, முன்னாள் ஹரியானா முதலமைச்சர் பன்சி லாலி மருமகள் ஆவார். மேலும் பிவானி மாவட்டத்தின் தோஷம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும் ஆவார். மாநில காங்கிரஸ் செயல் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கிரன் சவுத்ரி. இந்நிலையில், அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியதாக தகவல் கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் புபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் தன் மீது தனிப்பட்ட முறையில் வன்மத் தாகுதல் நடத்தியதாக கிரன் சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தான் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் கடின உழைப்பால் தன் வாழ்க்கையை காங்கிரசுக்காக அர்ப்பணித்ததாகவும் கூறினார்.
ஆனால் சில ஆண்டுகளாக, அரியானா காங்கிரஸ் தனிமனிதனை மையமாகக் கொண்ட கட்சியாக மாறுவதை தான் பார்த்ததாகவும், காங்கிரஸ் முன்னோக்கிச் செல்ல வேண்டிய கொள்கைகளை பின்பற்றுவதை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஹரியானா காங்கிரஸ் ஒருபோதும் முன்னேறாது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றும் தனது தொண்டர்களுக்கு சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில், “ஒரு புதிய ஆரம்பம், ஒரு புதிய விடியல். இன்று ஒரே இந்தியா, மகத்தான இந்தியா என்ற கருத்தாக்கத்திற்காக, வளர்ந்த பிராந்தியம் மற்றும் மாநிலத்தின் நோக்கத்திற்காக எனது தொண்டர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இணைந்தேன்.
சவுத்ரி பன்சி லால் ஜியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஹரியானா மற்றும் அப்பகுதி மக்களின் நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்” என்று கிரன் சவுத்ரி பதிவிட்டுள்ளார்.