ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடந்த ரியாஸி மாவட்டத்தில் இன்று (ஜூன் 10) காலை முதல் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தாக்குதல் நடந்த அடர்ந்த வனப்பகுதியில் ராணுவத்தினர் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை குழு ரியாஸிக்கு வந்துள்ளது. இந்தக் குழுவானது நிகழ்விடத்தில் ஆய்வு செய்து தடையங்களை சேகரிக்கும் எனத் தெரிகிறது.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது. இந்த கொடூரமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும், மேலும் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.