சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊடகவியலாளர் தங்கமணியை தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-.
நாமக்கல் அருகே, காவிரி ஆற்றிலிருந்து, சட்ட விரோதமாக மின்மோட்டார்கள் மூலம், சாய ஆலைகளுக்கு தண்ணீர் திருடுவதைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamil24x7 செய்தியாளர் சகோதரர் தங்கமணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பொதுமக்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து திமுகவினராலும், சமூக விரோதிகளாலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த வாரம், போதை மருந்து கடத்தல்காரர்கள் நிறுவனத்தில் நடந்த சோதனை குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.
சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்து, அதனை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், போலி வழக்கு பதிவு செய்வதும் என, திமுக அரசு, ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்குகிறது.
உடனடியாக, இந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊடகவியலாளர் சகோதரர் திரு. தங்கமணி அவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.