பழனி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்று விஏஓ, விஏஒவின் உதவியாளர் காவலர் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சித்ததாக ஆயில்குடி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி புகார் அளித்துள்ளார் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதில் பழனி அருகே, மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் திரு. கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர், காவலர் என நான்கு பேர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால், மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதன்படியே, மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகளைக் கொலை செய்வதும், அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், தொடர்கிறது. கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.
ஆனால், சட்டம் ஒழுங்கு பற்றியோ, அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல், திமுகவினர் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது திமுக அரசு. திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த பொதுமக்களைப் போல, போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு அரசு அதிகாரிகளையும் தள்ளிக் கொண்டிருக்கிறது இந்த விடியாத அரசு.
இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.