பொதுவாக இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் யாராவது தெரிவித்தால் அதற்கு முதல் நாளாக பதிலடி கொடுப்பவர் இந்த சடகோப ராமானுஜர். திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா போன்றவர்கள் சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்த போதும் இவர் கடுமையான பதில் கொடுத்தார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறாக சித்தரித்ததாக சர்ச்சைகள் எழுந்தபோது வைரமுத்துவை எதிர்த்து உண்ணாவிரதமும் இருந்தார். அப்போது “இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம், என்ற இவரது பேச்சு சமூகத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில் தான் தற்போது இந்துக்கள் சிலிர்த்து எழ வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று நடந்த திருப்பாவை முற்றோதுதல் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரான சடகோப ராமானுஜ ஜீயர், இந்துக்களை விமர்சிப்பவர்கள் குறித்து கடுமையாக பேசினார். “ஆண்டாள் தாயார் இல்லையெனில் இந்த உலகமே கிடையாது. சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு.
இன்று கோயில் வழிபாடுகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பது சனாதன தர்மத்தின் எழுச்சி ஆகும். எந்த மதத்தையும் தாழ்வாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது என்பது எங்கள் கருத்து. அதே நேரம் சனாதன தர்மத்தையோ, இந்து மதத்தையோ, இழிவாக பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீப காலமாக இந்து மதத்தையும், கடவுள்களையும் தப்பு தப்பாக பேசுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதைக்கண்டு ஹிந்துக்கள் சிங்கமாக விழித்து எழ வேண்டும் என்று பேசியுள்ளார்.