அயோத்தியில் ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டுவருகிறது. மூலவர் ராமர் சிலை ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து மதத் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அயோத்தி வரவுள்ளனர். இந்நிலையில, அங்கு கோயில் எழுப்புவதற்கான இயக்கத்தில் முன்னிலை வகித்த பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி , முரளி மனோகர் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் கிருஷ்ணன் கோபால், ராம் லால், அலோக் குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினர்.
அன்றைய தினம் மிகவும் கூட்ட நெரிசல் நிலவும் என்பதால், அத்வானி, ஜோஷி அவர்களின் முதுமையைக் கருத்தில் கொண்டு அன்றைய தினம் அவர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இதையடுத்து, இந்தத்தலைவர்கள் பின்னொரு நாளில் அயோத்திக்கு பிரத்யேகமாக அழைத்துச் செல்லப்படலாம் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் திரளான கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதிலேயே எங்கள் கவனம் முழுமையாக உள்ளது’ என அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் இது தொடர்பாக அத்வானி, ஜோஷி அவர்களின் தரப்பில் தெரிவிக்கையில், ‘தலைவர்களுக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது. அன்றைய தினம் அயோத்தி செல்வதற்கான வாய்ப்புகள் குறித்து யோசிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னாள் பிரதமர் தேவெ கௌடா உள்ளிட்டோரையும் செவ் வாய்க்கிழமை சந்தித்து பிரதிஷ்டை விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.