கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகிய மண்டபம் பகுதியில் பிஸ்மி என்கிற அசைவ உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்துக்கு தனது நண்பருடன் வெள்ளாங்கோடு ஊராட்சி கவுன்சிலர் வினோத் சாப்பிட சென்றுள்ளார்.
அந்த உணவகத்தில் யூடியூப்பர்களால் புகழ்ந்து பேசப்பட்ட பரோட்டா மற்றும் பீப் கறியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிடும்போது பீப் கறியிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் உடனே சாப்பிடுவதை பாதியில் நிறுத்தி விட்டு உணவக உரிமையாளரிடம் பீப் கறியிலிருந்து துர்நாற்றம் வருவதாகவும், பீப் கறி கெட்டு போய்விட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
உணவக உரிமையாளர் இதனை கண்டுகொள்ளாததால், தான் ஆர்டர் செய்த உணவுக்கு பணம் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார், வழியில் சென்று கொண்டிருந்தபோது மூன்று முறை தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிஸ்மி உணவகத்தில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாகராஜ் தலைமையில் ஆய்வு செய்தனர்.
அப்போது உணவகம் முழுவதும் ஆய்வு செய்த அதிகாரிகள் கெட்டுப்போன உணவுகளை குப்பை தொட்டியில் கொட்டி அப்புறப்படுத்தினர். உணவு மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்ததோடு உணவக உரிமையாளர் முகமது பக்ரீதனுக்கு நோட்டீஸ் வழங்கியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
பிஸ்மி உணவகம் மீது ஏற்கனவே 10 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 3வது முறையாக ஆய்வு மேற்கொண்டதால் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்ப பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவு கிடைக்கப்பட்ட பின்னர் உணவகத்திற்கு சீல் வைப்பதை பற்றி உயர் அதிகாரிகள் முடிவு எடுப்பார் என்றும் நாகராஜ் கூறினார்.
மேலும் சென்னையில் உள்ள பிஸ்மி உணவகத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு பிரபல யூடியூப்பர் இர்பான் சென்று அங்குள்ள உணவை சாப்பிட்டுவிட்டு அந்த உணவகத்தை புகழ்ந்து இதுவரை சென்னையில் எனக்கு பிடித்தது!! சென்னையில் உள்ள சிறந்த உணவகங்களில் ஒன்று. இவ்வாறு அந்த காணொளியின் கீழ் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.