தரமற்ற அரசு சைக்கிள்கள் : கொளுத்தும் வெயிலில் நடந்தும் பேருந்தில் தொங்கியும் பள்ளிக்கு பயணம் : விடியல் ஆட்சியில் அவலம் !

தரமற்ற அரசு சைக்கிள்கள் : கொளுத்தும் வெயிலில் நடந்தும் பேருந்தில் தொங்கியும் பள்ளிக்கு பயணம் : விடியல் ஆட்சியில் அவலம் !

Share it if you like it

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள்கள் மிகவும் தரம் குறைந்ததாகக் கூறி மாணவர்களும்,பெற்றோர்களும் அவற்றை சொற்ப பணத்திற்கு விற்று வரும் அவலம் அரங்கேறி உள்ளது.

கோவையில் செல்வபுரம் மற்றும் செட்டி தெருவில் உள்ள கடைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய பல சைக்கிள்கள் (ஆண் மாடல் சைக்கிள்கள் ரூ.2,000-ரூ.2,300 வரையிலும்) (பெண் மாடல்கள் ரூ.1,800-ரூ.2,000 வரையிலும்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையானது செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கடையின் உரிமையாளர் கூறியபோது, ​​சைக்கிள்கள் தரமில்லாதவை என்றும், மாணவர்களால் பழுதுபார்க்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாத நிலையில் அவற்றை விற்று விடுவதாகவும் தெரிவித்தார். “பல சைக்கிள்கள் சரியான வடிவத்தில் இல்லை. பிரேக்குகள் வேலை செய்யவில்லை மற்றும் சக்கர விளிம்பு வடிவம் இல்லாமல் இருப்பது, சிலவற்றில் டியூப்கள் கிழிந்தும், சிலவற்றில் சீட் கவர்கள் சரியாகப் பொருத்தப்படாதது, என சைக்கிள்கள் தரமற்ற நிலையில் உள்ளது. மாணவர்கள் முதலில் சைக்கிளை சரி செய்து பாதுகாப்பாக ஓட்ட வேண்டும். இதற்காக, அவர்கள் 500 – 700 ரூபாய் வரை செலவிட வேண்டும்,” என்றார்.

பலர் சைக்கிள்களை பழுதுபார்க்க முடியாமல் ரூ.800 முதல் ரூ.1,000 ரூபாய்க்கு அந்த சைக்கிள்களை விற்று விடுகின்றனர். அரசு தரமான சைக்கிள்களை வழங்கியிருந்தால், பெரும்பாலான மாணவர்கள் அவற்றை விற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்றார்.

கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், “மாணவர்களிடம் சைக்கிள் உதிரி பாகங்களை நன்றாக பொருத்துதல், டயர் டியூப் மாற்றுதல் போன்றவற்றுக்கு அதிகபட்சமாக ரூ.900 செலுத்தி வாங்குகிறோம். அதன்பிறகு நிபந்தனைக்கு ஏற்ப ரூ.1800 – ரூ.2300க்கு விற்கிறோம். மாணவிகளின் சைக்கிள் குறித்து கேட்டபோது, ​​குடிப்பழக்கத்திற்கு அடிமையான பல தந்தைகள் தங்கள் மகள்களின் சைக்கிளை விற்று மது வாங்குவதாக கூறினார்.

செல்வபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கூறும்போது, ​​“கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனக்கு சைக்கிள் கிடைத்தபோது நான் 11 ஆம் வகுப்பில் இருந்தேன், ஆனால் அது தரமற்றதாக இருந்தது. நான் பழுதுபார்ப்பதற்காக எனது சைக்கிளை ஒரு கடைக்கு எடுத்து சென்றேன். ஆனால் கடை உரிமையாளர் 550 ரூபாய் செலவாகும் என்று கூறினார். எனவே நான் அதை அவருக்கே 900 ரூபாய்க்கு விற்று எனது பாக்கெட் மணியாக பயன்படுத்தினேன் என்று கூறினார்.

இதுகுறித்து அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களை பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பதே விலையில்லா மிதிவண்டித் திட்டம் தான். அப்படி இருக்கையில் பள்ளியில் இலவசமாக வழங்கும் சைக்கிள்கள் மிகவும் தரம் குறைந்தவையாக உள்ளது வ்ருத்தமளிக்கிறது. இதனால் மாணவர்கள் சைக்கிளை ஓட்ட பயந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள் அந்த சைக்கிளை நல்ல வியாபாரம் செய்து அவர்கள் பணம் சம்பாதித்து விடுகின்றனர், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் பள்ளியில், ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான மாணவர்கள் நடந்தோ அல்லது பஸ்ஸிலோ தான் பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கத் தலைவர் ஆர்.ராம்குமார் கூறுகையில், மாநிலம் முழுவதும் இப்பிரச்னை நிலவி வருகிறது. இலவச சைக்கிள்களை தரமான சைக்கிள்களை வழங்கி, மாணவர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித்துறையை வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.

தமிழக அரசு இலவசமாக எதனை வழங்கினாலும் அதனை சரியான தரத்துடன் வழங்க வேண்டும். இல்லையேல் இலவசமாக எதனையும் கொடுக்காமல் இருக்க வேண்டும். வெறும் வெற்று விளம்பரத்திற்காக இலவசமாக வழங்கிவிட்டு நாளை அதனை மாணவர்கள் பயன்படுத்தும்போது எதாவது அசம்பாவிதம் நடந்தால் அந்த மாணவருக்கும் மாணவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு என்ன பதில் சொல்ல போகிறது ?

மக்களின் வரிப்பணத்தில் வழங்கக்கூடிய திட்டங்களுக்கு உங்கள் பெயர் உங்கள் தகப்பனார் பெயர் சூட்டி விளம்பரம் செய்து கொடுக்கிறீர்கள். அவ்வாறு கொடுக்கும் பொருளை நல்ல தரமான பொருளாக கொடுக்கலாமே ? அதில் ஏன் கஞ்சத்தனம் காட்டி அதிலும் ஊழல் செய்கிறீர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளே திமுக அரசை விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச சைக்கிள்கள் மிகவும் தரம் குறைந்த நிலையில் உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் திமுக அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே ? இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *