மதரஸாவில் நடந்த அடுக்கடுக்கு சம்பவம் : திராவிட கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மௌனம் ஏன் ?

மதரஸாவில் நடந்த அடுக்கடுக்கு சம்பவம் : திராவிட கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மௌனம் ஏன் ?

Share it if you like it

மதரஸா மாணவர் காணவில்லை :-

மதுரைக்கு அருகில் உள்ள கௌசியா அறக்கட்டளை கீழ் இயங்கக்கூடிய இஸ்லாமிய மதரஸா பள்ளியில் படிக்கும் பீகாரைச் சேர்ந்த 9 வயது மதரஸா மாணவர், பீகாரைச் சேர்ந்த சக மாணவரால் கடந்த மே 25ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு சில ஆங்கில நாளிதழ்கள் மற்றும் உள்ளூர் தமிழ் நாளிதழ்களில் மட்டுமே இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியானது. ஆனால் முஸ்லீம் அமைப்புகளும் அவற்றின் தலைவர்களும் இவ்விவகாரத்தில் வாய் திறக்காமல் மௌனமாய் இருந்துள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு ஒன்றென்றால் துடித்துப்போகும் திமுக அரசு கூட இந்த சம்பவத்தை பற்றி மூச்சு கூட விடவில்லை.

முஸ்லிம் மௌலவி, ஹபிஸ் முஹம்மது ரபீக் மிஸ்பாஹி, தமிழகத்தில் இயங்கும் மதரஸாக்கள் குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் வட இந்திய முஸ்லிம்கள் தமிழ் மதரஸாக்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில், மதரஸாக்களை நடத்துபவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன், இதே மதரஸாவில் படிக்கும் மூன்று மாணவர்கள் காணாமல் போனார்கள். ஆனால் காணாமல் போன மாணவர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்று கூறப்படுகிறது.

கௌசியா அறக்கட்டளையின் பின்னணி :-

கௌசியா அறக்கட்டளை என்பது மும்பையை அடிப்படையாக கொண்ட அகில இந்திய மேமன் ஜமாத் கூட்டமைப்பால் நடத்தப்படும் மதுரையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அமைப்பாகும். அகில இந்திய மேமன் ஜமாத் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரான அஷ்ரப் கனி சயானி என்பவர் கௌசியா அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் ஆவார்.

கௌசியா அறக்கட்டளையானது 2003 ஆம் ஆண்டு முதல் மதுரையில் மேலூருக்கு அருகிலுள்ள காத்தபட்டி சுங்கச்சாவடிக்கு அருகில் அல்-ஜமியத்துல் கௌசுல்-வாரா என்ற குடியிருப்பு மதரஸாவை நடத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை முஸ்லிம் மாணவர்களுக்காக, ஹனாபி இஸ்லாம் பள்ளியை அடிப்படையாகக் கொண்ட HIFZ மற்றும் AALIM படிப்பை மதரஸா நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி குரான், உருது, அரபு மொழி படிப்புகள் நடத்தப்படுகின்றன. கௌசியா அறக்கட்டளை உருது மொழியை மேம்படுத்துவதற்கான தேசிய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஓராண்டு உருது மொழிப் படிப்பையும் நடத்தி வருகிறது.

மதரஸா மாணவர் கொலை :-

பீகாரைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட கௌசியா அறக்கட்டளை மதரஸாவில் வட இந்திய மாணவர்களைச் சேர்ந்த பல முஸ்லிம் குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த மே 24ஆம் தேதி மதரஸா வளாகத்தில் வசிக்கும் ஷாநவாஸ் (9) என்ற மைனர் மாணவர் காணாமல் போனார். இது குறித்து மதரசா பள்ளி நிர்வாகிகள் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, ஜெயக்குமார், பழனியப்பன் ஆகியோர் அந்த குழுவில் இருந்தனர். தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மதரசா வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஷாநவாஸின் உயிரற்ற உடல் கிடந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மற்றொரு மாணவர் முகமது சம்சாத் (13) ஷாநவாஸ் உடலை இழுத்துச் சென்று செப்டிக் டேங்க்கில் வீசுவது தெரிந்தது.

இதனை அடுத்து சிறார் நல வாரிய அதிகாரிகள் முன்னிலையில் சந்தேகத்திற்குரிய முகமது சம்சாத்திடம் விசாரணை நடத்திய சிறப்புக் குழுவினர், விசாரணையின் போது, ​​ஷாநவாஸை கத்தியால் குத்தியதை முகமது சம்சாத் ஒப்புக்கொண்டார். இறந்து போன தனது தாய்க்கு எதிராக தவறான கருத்து தெரிவித்ததற்காக ஷாநவாஸை கொன்றதாக முகமது சம்சாத் வாக்குமூலம் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மீது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் மதுரையில் உள்ள சிறார் கண்காணிப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். ஷாநவாஸ் பூர்னியா மற்றும் முகமது ஷம்சாத் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மதரஸா மாணவர்கள் காணாமல் போனது :-

இந்த சம்பவம் நடை பெறுவதற்கு முன்னரே, கௌஸியா அறக்கட்டளை சார்ந்த மதரஸாவில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் காணாமல் போனதாக ஷா இப்ராஹிம் ஷெரிப் என்ற முஸ்லிம் நபர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முஹம்மது ஹுசைன் பின் சஜித் ராசா வயது 14, முகமது சச்சசெயின் ராஜா பின் சஃபிகதர் வயது 14 மற்றும் சஜித் குலாம் அஸ்ரப் குரைஷி வயது 15 ஆகிய மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன மாணவர் தொடர்பான தகவல்கள் எங்கும் கிடைக்கவில்லை.

முஸ்லிம் அமைப்புகள் மௌனம் :-

இச்சம்பவம் முஸ்லிம் மதரஸாவில் நடந்ததால், தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் பேசப்படவில்லை. சில ஆங்கில நாளிதழ்கள் மற்றும் உள்ளூர் தமிழ் செய்தித்தாள்கள் மட்டுமே இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டன. முஸ்லிம் அமைப்புகளும் அவற்றின் தலைவர்களும் இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்தனர்.

இஸ்லாமிய மௌலவி, ஹபிஸ் முஹம்மது ரஃபீக் மிஸ்பாஹி என்பவர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு, வட இந்திய முஸ்லிம்கள் தமிழகத்தில் மதரஸாக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மத்ரஸாக்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அவற்றைச் செயல்படுத்துபவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்கக் கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும் ஹபிஸ் முஹம்மது ரஃபீக் கூறுகையில், கௌசியா அறக்கட்டளை மதரஸாவில் நடந்த இந்த கொலைச் சம்பவம் குறித்து காத்தாபட்டி கிராமத்தில் உள்ள பலருக்கு தெரியாது என்று கூறினார்.

திராவிட கட்சிகளின் மௌனம் :-

திராவிடக் கட்சிகள் இவ்விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றன. இதே சம்பவம் ஏதேனும் ஒரு இந்துப் பள்ளியிலோ அல்லது வேத பாடசாலையிலோ நடந்திருந்தால், திராவிடக் கட்சியினர் இந்த சம்பவத்தை பெரிய சர்ச்சையாக்கி அந்த நிறுவனத்தையே மூடக் கோரி பிரச்சாரம் செய்திருக்கும். கடந்த மே 2023 இல், ஸ்ரீ ரங்கத்தில் உள்ள வேத பாடசாலையில் படிக்கும் மூன்று மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இதனை அடுத்து உடனடியாக திராவிட கட்சியினர், வேத பாடசாலையை தமிழக அரசு மூட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் முஸ்லிம் மதரஸாவில் நடந்த இந்த சம்பவம் குறித்து வாய்கூட திறக்காமல் உள்ளனர்.

முஸ்லிம் அமைப்புகளும் ஜமாத் குழுக்களும் மௌனம் :-

கௌசியா அறக்கட்டளை மதரஸாவில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள். கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன், அதே மதரஸாவில் படிக்கும் மூன்று மாணவர்கள் காணாமல் போனது, வளாகத்திற்குள் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. ஷா இப்ராஹிம் ஷெரிப் என்ற ஒரு முஸ்லிம் சமூக ஊடக பயனர் மட்டுமே தனது சமூகவலைத்தள பக்கத்தில் காணாமல் போன மாணவர்களைப் பற்றி பதிவிட்டுள்ளார். மும்பையை தளமாகக் கொண்ட மேமன் ஜமாத் நடத்தும் மதரஸாவில் இந்த சம்பவம் நடந்ததால், மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் ஜமாத் குழுக்களும் இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றாமல் மௌனம் காத்துள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *