பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் மரணத்திற்கு ஏபிவிபி இரங்கலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் பதிவு செய்கிறது. மேலும் தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை பலமுறை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சுட்டிக் காட்டியும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால் கூலிப்படை மற்றும் குண்டர்களினால் நடக்கும் கொலைக் குற்றங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் உயரிய பொறுப்பான மாநில தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது.
மேலும் தமிழக முதல்வர் வசம் உள்ள காவல் மற்றும் உள்துறை கைகள் கட்டப்பட்டு செயலற்று உள்ளது. இதன் விளைவாகத்தான் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இது போன்ற அசாதாரணமான சம்பவங்கள் நிகழ்கின்றன. இதை மாநில அரசின் மெத்தனப்போக்காகவும் இயலாமையாகவே அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் கருதுகிறது. மேற்படி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்துகிறது.