திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள பாலவேடு, சாஸ்திரி நகரில் சுமார் 500 வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 3 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டாவழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வாறு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களின் சர்வே எண்கள் 38 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிராம நத்தம் பட்டாவுக்காக பொதுமக்கள் விண்ணப்பித்த போது, சம்பந்தப்பட்ட நிலங்கள் மேய்க்கால் புறம்போக்கு என, வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பழைய சர்வே எண்களின் அடிப்படையில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, சாஸ்திரி நகர் மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், சாஸ்திரி நகர் மக்களிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலவேடு ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரி வசூல் செய்யவில்லை எனவும், அத்தியாவசிய தேவைகளான மழைநீர் வடிகால், சாலைகள், குடிநீர் வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாஸ்திரி நகர் பொதுமக்கள், தங்களுக்கு கிராம நத்தம் பட்டா வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி, 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அதே நேரத்தில், மக்களவைத் தேர்தலுக்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் சாஸ்திரி நகர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.