சினிமாவாவே இருந்தாலும் எங்களுக்கு மதம்தான் முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது குவைத் அரசு. ஆம், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு குவைத் அரசு அதிரடியாக தடை விதித்து படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, செல்வராகவன், கிங்ஸ்லி என பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் ஏப்ரல் 13-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2-ம் தேதி வெளியான நிலையில், ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியது. யோகிபாபு நடித்த ‘கூர்கா’ திரைப்படத்தின் மறுபதிப்புதான் பீஸ்ட் திரைப்படம் என்று கடுமையான விமர்சனத்துக்கு உள்ளது.
தவிர, படத்தின் ட்ரைலரின் காவி கலர் ஃபிளக்ஸ் போர்டு துணியை விஜய் கத்தியால் கிழிப்பதுபோல சீன் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்துவிட்டு, காவிகளை (ஹிந்துக்களை) கிழித்து தொங்கவிட்ட ஜோசப் விஜய் என்று அவரது ரசிகர்களும், தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் குதூகலமிட்டார்கள். இது ஹிந்து உணர்வாளர்களை மிகவும் புண்படுத்தியது. இதனால், ஹிந்து அமைப்புகள் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றது. அதேசமயம், படத்தில் அப்படி என்ன காட்சிதான் இடம்பெற்றிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் பீஸ்ட் திரைப்படத்திற்கு குவைத் நாடு திடீரென தடை விதித்து, விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. அதாவது, படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், அப்படத்துக்கு தடை விதித்திருப்பதாக அந்நாடு அறிவித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஹிந்துக்களை இழிவுபடுத்துவதுபோல காட்சிகள் இருந்தால், இங்கிருக்கும் போராளிகளோ சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும் என்று பொங்குவார்கள். அதேசமயம், மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி படம் வந்து விட்டால், அய்யகோ இது சமூக நீதிக்கு எதிரானது என்று கூக்குரல் எழுப்புவார்கள். ஆனால் இஸ்லாமிய நாடான குவைத்தோ, சினிமாவாகவே இருந்தாலும் எங்களுக்கு மதம்தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறது.
குவைத் அரசு, ஏற்கெனவே இதேபோல பல படங்களுக்கு தடை விதித்திருக்கிறது. துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான குரூப் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர். ஆகிய திரைப்படங்களுக்கும் குவைத் அரசு தடை விதித்திருந்தது. காரணம், குரூப் படத்தில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிக்கு, குவைத் நாடு தஞ்சமளிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்ததும், எஃப்.ஐ.ஆர். படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றததும்தான். தற்போது இதே காரணத்துக்காக பீஸ்ட் படத்துக்கும் தடை விதித்திருக்கிறது. இதுதான் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், குவைத் தடை விதித்திருப்பதால் மற்ற இஸ்லாமிய நாடுகளும் தடை விதித்துவிடுமோ என்கிற பயம்தான். அப்படி மற்ற நாடுகளும் தடை விதித்து விட்டால் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும்.
காவியை கிழித்து தொங்கவிட்டு விட்டார் என்று பீற்றிக் கொண்டது பீஸ்ட் படக்குழு. தற்போது பீஸ்ட் படத்தையே கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள் இஸ்லாமியர்கள். இதுதான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதோ…