புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடியதாக ஃபயஸ் ரஷீத் என்கிற பொறியியல் மாணவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ஹெச்ஆர்பிஆர் லே அவுட்டில் வசித்து வருபவர் ஃபயஸ் ரஷீத். இவர், அங்குள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த சூழலில், 2019-ம் ஆண்டு ஊருக்குச் சென்றிருந்த துணை ராணுப்படையினர் சுமார் 2,500 லீவு முடிந்து மீண்டும் பணிக்குச் செல்வதற்காக, 70 வாகனங்களில் ஜம்மு காஷ்மீருக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவிலுள்ள லாடூமோடு என்கிற இடத்தில் பிற்பகல் 3.15 மணியளவில் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த, ஆதில் அகமது தார் என்ற பயங்கரவாதி, சுமார் 40 வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது 300 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் ஏற்றிய காரை மோதினான். இச்சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பலியாகினர்.
இந்த நிலையில், புதிதாக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய ஃபயஸ் ரஷீத், புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும், பெங்களூரு காவல்துறையை டேக் செய்து, பின்னூட்டமிட்டனர். மேலும், இது தொடர்பாக பானஸ்வாடி காவல் நிலையத்திலும் ரஷீத் மீது புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, ரஷீத் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பேக்கரியில் இருந்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ரஷீத்துக்கு 5 வருடம் சிறைத் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ரஷீத் அடைக்கப்பட்டார். மேலும், ரஷீத்துக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதை அவர் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். இந்த செய்தியைப் படித்த பலரும் நாட்டுக்கு எதிராக பேசும், செயல்படும் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.