கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் பதுங்கி மக்களோடு மக்களாகக் கலந்து ஆட்டோ டிரைவர் போல உலா வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதியை காஷ்மீர் போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவன் ஹுசைன். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயலை அரங்கேற்றி வழக்கில் சிக்கியவன், போலீஸாருக்கு பயந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்திருக்கிறான். அங்கு, மக்களோடு மக்களாகக் கலந்தவன், வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்திருக்கிறான். இதனால், இவன் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இவனை தேடி வந்த ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தடுப்பிப் பிரிவு அதிகாரிகளுக்கு, ஹுசைன் பெங்களூருவில் பதுங்கி இருக்கும் தகவல் சமீபத்தில்தான் தெரியவந்தது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கடந்த வாரம் பெங்களூரு வந்தனர். பின்னர், பல வழக்குகளில் தேடப்பட்டுவரும் பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஹுசைன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக பெங்களூரு போலீஸாரிடம் கூறியவர்கள், அவனை கைது செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, ஹுசைனை பெங்களூரு போலீஸார் வலைவீசி தேடினர். இந்த ஆபரேஷனில் ராஷ்டிரீய ரைஃபில்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் இணைந்தனர். இந்த சூழலில், ஆட்டோ டிரைவராக மாறுவேடத்தில் இருந்த ஹுசைனை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இவன், கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு ஶ்ரீராமபுரா பகுதியில் மனைவியுடன் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவனுக்கு 2 மனைவிகள். ஒருவர் ஜம்மு காஷ்மீரில் இருக்கிறார். மற்றொரு மனைவியுடன் பெங்களூருவில் குடியிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்திருக்கிறான். இவனது பின்புலம், அந்த ஆட்டோவின் உரிமையாளருக்குக் கூட தெரியாதாம். ஹுசைன் எதற்காக பெங்களூருவை தேர்வு செய்து பதுங்கி இருந்தான்? இங்கு நாசவேலைகளுக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? ஹுசைன் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தான்? என்பது குறித்து போலீஸார் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.