கர்நாடகா கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டால், கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை விடுத்த எச்சரிக்கையால் ஆட்டம் கண்ட தி.மு.க., இடத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கவே, எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, கடந்த மாதம் 23-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து பாட்னாவில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆம் ஆத்மி என பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் 2-வது சுற்று கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அக்கூட்டம் இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிம்லாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 2-வது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கூறிய, கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளக் கூடாது. மீறி கலந்து கொண்டால், கோட்டையோ முற்றுகையிடுவோம் என்று கூறியிருந்தார். இதனால், தி.மு.க. சற்றே ஆட்டம் கண்டது. இதையடுத்து, காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரங்களால், கர்நாடகாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை மீண்டும் சிம்லாவிலேயே நடத்த பரீசிலனை நடந்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தவும் ஆலோசனை நடந்து வருகிறதாம். ஆகவே, இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா அல்லது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.