பகத்சிங் பிறந்த தினம் இன்று

பகத்சிங் பிறந்த தினம் இன்று

Share it if you like it

செப்டம்பர் 27, 1907ல் மேற்கு பஞ்சாபில் (இன்றைய பாகிஸ்தான்), கிஷன் சிங்க் மற்றும் வித்யாவதிக்கும், மகனாக பிறந்தார் பகத்சிங்.


நாட்டிற்காக, கான்பூரில் இருக்கும் தன் வீட்டை விட்டு வெளி வந்த, திருமண வயதிலுள்ள பகத்சிங், “அடிமையாய் இருக்கும் என் தேசத்தில், தேசத்துக்கான மரணமே என் மணப்பெண்” என்று கூறி “ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன்” என்ற அமைப்பில் இணைந்தார்.


1928ல், லாலா லஜ்பத்ராயை கொன்ற ‘ஜேம்ஸ் காட்’டை கொல்ல முடிவு செய்து, தவறாக ‘சவுண்டர்ஸ்’ என்ற ஆங்கிலேய போலீஸ் அதிகாரியை கொன்று, பகத்சிங் தப்பி ஓடிய கதையை சொல்வதா? அல்லது இந்த குற்றத்திற்காக கைது செய்யபட்டவுடன், சிறைக்கு அனுப்பப்பட்ட அவர், கைதிகளுக்கான உரிமைகளுக்காகவும், சலுகைக்காகவும் உண்ணாவிரதம் இருந்து போராடின கதையை சொல்வதா?


சிறையிலும், தன் தேசத்தின் விடுதலைக்கான போராட்ட எழுச்சியை சிறைவாசிகளுக்கிடையே உண்டாக்கின, உணர்ச்சியை சொல்வதா?


கைது செய்யப்பட்ட பகத்சிங் ,அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, 1930 அன்று, தனக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்ட செய்தியை மிக தைரியத்துடன் அறிந்து கொண்டாரே, அந்த தைரியத்தை சொல்வதா?


எந்த மாஜிஸ்திரேட்டும் வர மறுக்கையில், ஒரு தற்காலிக நீதிபதி, பகத்சிங் தூக்கிலிடுதலை மேல் பார்வையிட்டு, இறுதி சான்று வழங்க கொண்டு வந்து, 24 மார்ச், 1931 அன்று தூக்கிலிடப் பட்டிருந்த பகத்சிங்கை 11 மணி நேரத்துக்கு முன்பே, 23 மார்ச் 1931, அன்று மாலை 7 மணிக்கு தூக்கு மேடைக்கு அழைத்து சென்று, தூக்கிலிட்ட ஆங்கிலேயர்களின் அவசர நடவடிக்கையை சொல்வதா?


அல்லது, 23 வயதில் தூக்கு மேடையில் ஏறி, தூக்கு கயிற்றில் தூக்கிலிடப் பட்டு, அவரது உயிர் பிரியும் வரையில் வரை, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்தை, தன் உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்து மாய்ந்தாரே, அந்த வீர இளைஞரின் சுதந்திர தாகத்தை பற்றி சொல்வதா?


எதை சொன்னாலும், சொல்ல மறந்தாலும், பகத்சிங்கின் உயிர் தியாகம், பாரத தேசம் முழுவதும் ஒரு வேகம் நிறைந்த, ஆவேசம் நிறைந்த, விடுதலை உணர்ச்சியை தூண்டியது. ஒவ்வொரு இளைஞனும், தன்னை ஒரு பகத்சிங்காக நினைக்கும் சூழ்நிலை உருவாக்கியது. பாரதத்தின் சுதந்திரத்துக்கு, மிகப்பெரிய உத்வேகமாக உருவெடுத்தது. புரட்சி, கிளர்ச்சி, விடுதலை என்ற பாரத சுதந்திர போராட்டத்துக்கு, பகத்சிங்கின் பெயர், வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
நெஞ்சை நிமிர்த்து, தேசத்துக்காக, மரணத்தை தன் கழுத்தில் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட, 23 வயதான தியாகி பகத்சிங்கிடம் இருந்து தேசப்பற்றை, கற்றுக் கொள்வோம்.


– Dr.M. விஜயா


Share it if you like it