33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 11-வரை நடைபெறும் உலகின் மிப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் திருவிழாவில் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் இருந்து 117 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்கி உள்ளனர்.
இந்தநிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் மனு பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த போட்டியில் தென்கொரியாவைச் சேர்ந்த யே ஜின் கிம் 243.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அடுத்ததாக மற்றொரு தென்கொரிய வீராங்கனை கிம் 241.4 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று மனு பாக்கர் பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் இந்தியாவிற்காக துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவிற்காக பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா என ஏராளமான தலைவர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதனை தொடர்ந்து அவரிடம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியின் கடைசி சில நிமிடங்கள் எப்படி இருந்தது? அதை எப்படிக் கையாண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் பகவத்கீதையை எப்போதும் படிப்பேன். அது எனது மனதிலேயே இருந்துவிட்டது. நீ எதைச் செய்ய வேண்டுமா அதை மட்டும் செய் என்ற பகவத்கீதை வரி தான் எனக்குள் ஓடிக் கொண்டு இருந்தது. உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.
விதியை உங்களால் மாற்றவே முடியாது இதுதான் எனது மனதில் ஓடியது. நீங்கள் கர்மாவில் கவனம் செலுத்த வேண்டும் இதனால் என்ன கிடைக்கும் என்பதை யோசிக்கக் கூடாது அதுவே எனது மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதில் இருந்து மீண்டு வர தாமதம் ஆனது. ஆனால், போனவை போகட்டும். அது கடந்த காலம் இனி நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவோம் என்று முடிவு செய்தேன். இந்த பதக்கம் என்பது டீம் வொர்க் தான். அதில் நான் வெறும் கருவி மட்டம் தான்” என்று மனு பாக்கர் கூறினார் .