இரு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் இந்தியா, பூடான் தேசிய கொடிகளை அசைத்தபடி வரவேற்பு அளித்தனர்.பிரதமரை வரவேற்கும் விதமாக பாரோவில் இருந்து தேசிய தலைநகர் திம்பு வரை சுமார் 45 கிமீ தூரம் மக்கள் தெருக்களில் அணிவகுத்து நின்றனர்.
பின்னர் ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனமாடி இளைஞர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு அவர்கள் நடனம் ஆடினர். அப்போது குஜராத்தின் பாரம்பரிய உடையான காக்ரா-சோலி மற்றும் குர்தா பைஜாமாவை இளைஞர்கள் அணிந்திருந்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் பூடான் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத்தொடர்ந்து திம்புவில் உள்ள தாஷிச்சோ ட்சாங் அரண்மனையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.