ஒற்றைக் காலில் தாவித் தாவிக் குதித்தவாறே 1 கி.மீ. தூரமுள்ள பள்ளிக்கு தினமும் சென்று வருகிறார் ஒரு சிறுமி. அவருக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்கு உதவுவதாக நடிகர் சோனு சூட் தெரிவித்திருக்கிறார்.
பீகார் மாநிலம் ஜமுய் நகரைச் சேர்ந்தவர் சீமா குமாரி. 10 வயது சிறுமியான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமமான ஃபதேபூரில் டிராக்டரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்துக்குள்ளானார். அப்போது, பலத்த சேதமடைந்த இடது காலை துண்டித்தால் மட்டுமே, சீமாவை பிழைக்க வைக்க முடியும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர். ஆகவே, சீமாவின் உயிர்தான் முக்கியம் என்று முடிவு செய்த அவரது பெற்றோர், இடது காலை எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சீமாவின் இடது காலை நீக்கி உயிரை காப்பாற்றினார்கள் மருத்துவர்கள். இதன் பிறகு, உடல் நிலை தேறிய நிலையில், ஒரு காலை இழந்தபோதும், சீமா தனது நம்பிக்கையை இழக்கவில்லை.
ஒரு கால் போனதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவிரும்பவில்லை. மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயாரானார் சீமா. இதற்கு அவரது பெற்றோரும் சம்மதிக்கவே, ஒற்றைக் காலில் தாவித் தாவிக் குதித்தவாறே மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார். ஆனால், சீமாவின் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால், சீமா சிரமப்பட்டு வந்தாலும் பள்ளிக்கு செல்வதை மட்டும் நிறுத்தவில்லை. இதுகுறித்து சீமாவிடம் கேட்டால், “நான் படித்து ஆசிரியராக விரும்புகிறேன். அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே என் குறிக்கோள்” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
இதனிடையே, சீமா ஒற்றைக் காலில் தாவித் தாவிக் குதித்தவாறே பள்ளிக்குச் செல்வதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, பல்வேறு தரப்பினரும் சீமாவுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். முதல்கட்டமாக, ஜமுய் மாவட்ட கலெக்டர் அவனிஷ் குமார், சீமாவின் வீட்டிற்கே சென்று அவருக்கு 3 சக்கர வண்டியை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில், சீமாவிற்கு செயற்கை கால் பொருத்த தாம் உதவி செய்யத் தயாராக இருப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சோனு சூட் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “இப்பொழுதெல்லாம் ஒன்றல்ல… இரண்டு கால்களில் குதித்துக்கொண்டு (சீமா) பள்ளிக்குப் போவாள். நான் டிக்கெட் அனுப்புகிறேன். இரண்டு கால்களிலும் நடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனு சூட், கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள் என பலருக்கும் உதவி செய்தார். மேலும், பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். சண்டிகரிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க ஏதுவாக, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும், ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்திருக்கிறார்.